தமிழகம்

பல்லடம், தாராபுரம், அவிநாசி பகுதிகளில் போலி மின் மீட்டர் பொருத்தி வசூல் வேட்டை

செய்திப்பிரிவு

திருப்பூர்: போலி மின் மீட்டர் பொருத்தி பல்லடம், அவிநாசி, தாராபுரத்தில் வசூல் வேட்டையில் ஈடுபடும் நபர்களிடம் பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என மின்வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பல்லடம் கொசவம்பாளையத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (40). தையல் தொழிலாளி. இவர்,வீட்டுக்கு மின் இணைப்பு கோரி,பல்லடம் மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். மின்வாரிய அதிகாரிகள் தடையின்மை சான்று கேட்டிருந்தனர்.

இந்நிலையில் அவரது வீட்டுக்குமின்வாரிய ஊழியர்போல வந்தஒருவர், மின் மீட்டர் ஒன்றை பொருத்திவிட்டு ரூ. 6 ஆயிரம்செலுத்துமாறு கூறியுள்ளார். மின்வாரியத்தின் கணக்கெடுக்கும் அட்டையை அந்நபர் வழங்கியதோடு, ரசீதை அலுவலகத்தில் வந்து பெற்றுக்கொள்ளுமாறு கூறிவிட்டு சென்றுவிட்டார்.

இதையடுத்து மின்வாரிய அலுவலகத்துக்கு மணிகண்டன் சென்று, ரசீதை கேட்டுள்ளார். மின்வாரிய அதிகாரிகள் விளக்கமளித்த பின்னரே தான் ஏமாற்றப்பட்டதை மணிகண்டன் உணர்ந்தார்.

இதுதொடர்பாக பல்லடம் காவல் நிலையத்தில் மணிகண்டன் புகார் அளித்தார். அவிநாசி, தாராபுரத்திலும் இதே போல மோசடி நடைபெற்றுள்ளதாக காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பல்லடம் மின்வாரிய செயற்பொறியாளர் சி.பழனிசாமி கூறியதாவது: மின்வாரியத்தில் பணியில் இல்லாத நபர்கள், தன்னை மின்வாரிய அலுவலர் எனக்கூறி, மின் இணைப்புபெறவேண்டி விண்ணப்பித்து நிலுவையில் உள்ள விண்ணப்பதாரர்களிடம் மின் மீட்டர் (அளவி)ஒதுக்கப்பட்டதாக நேரில் தெரிவித்து மோசடி செயலில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோன்ற மோசடி நபர்களிடம் பொதுமக்கள் ஏமாறவேண்டாம்.

பல்லடம் கோட்டத்தில்உள்ள அனைத்து மின் நுகர்வோரும் தங்களுக்கு வழங்கப்பட்ட மின் இணைப்புகளில் பொருத்தப்பட்ட மின் மீட்டர்களை பாதுகாப்பாகவைத்துக்கொள்ள வேண்டும். மின்மீட்டர் பொருத்தித் தருவதாகசந்தேகப்படும்படி யாரேனும் வந்தால் பல்லடம் உதவி மின்பொறியாளரை 94458 51217 என்றஎண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம், என்றார்.

SCROLL FOR NEXT