சென்னை செனாய் நகரில், ரூ.18 கோடி செலவில் மறுசீரமைக்கப்பட்ட திரு.வி.க. பூங்காவை முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்து பார்வையிட்டார். அமைச்சர்கள், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர். 
தமிழகம்

ரூ.18 கோடியில் புனரமைக்கப்பட்ட திருவிக பூங்கா: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை செனாய் நகரில், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் நிதியுதவியுடன், மெட்ரோ ரயில் நிறுவனத்தால் ரூ.18 கோடியில் மறுசீரமைக்கப்பட்ட திருவிக பூங்காவை முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுமக்கள் பயன்பாட்டுக்காகத் திறந்து வைத்தார்.

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்டம் 45.1 கி.மீ.நீளத்திலான இரண்டு வழித்தடங்களைக் கொண்டது. இதில் வழித்தடம்-2 சென்னை சென்ட்ரலிலிருந்து தொடங்கி செனாய் நகரிலுள்ள திருவிக பூங்காவுக்கு கீழே பூமிக்கு அடியில் செல்கிறது.

செனாய் நகரில்மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கதிருவிக பூங்காவின் சில பகுதிகள் எடுக்கப்பட்டன. மெட்ரோ ரயில்பணிகள் நிறைவடைந்த நிலையில்,பூங்கா ரூ.18 கோடி சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் நிதியில், மெட்ரோ ரயில்நிறுவனத்தால் மறு சீரமைக்கப்பட்டது. பணிகள் முடிவுற்ற நிலையில், நேற்று மாலை இந்த பூங்காவை முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்கள் பயன்பாட்டுக்குத் திறந்து வைத்துப் பார்வையிட்டார்.

சிறப்பு அம்சங்கள்ள்: பூங்காவில், தொடர் நடைபாதைகள், சறுக்கு வளையம், பூப்பந்து அரங்கு, கடற்கரை கைப்பந்து அரங்கு, கூடைப்பந்து அரங்கு,கிரிக்கெட் வலைப்பயிற்சி, திறந்தவெளி உடற்பயிற்சி, 8 வடிவமைப்புடன் நடைபாதை, சிறுவர்கள் விளையாடுமிடம், திறந்தவெளி அரங்கம்,யோகா மையம், உருவச் சிலைகள்மற்றும் படிக்கும் பகுதி போன்ற வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதுதவிர, மிகவும் அரிய வகை மற்றும் பழமையான மரங்கள் பூங்காவின் வேறு இடத்திலிருந்து எடுக்கப்பட்டு, ஓரத்தில் வேருடன் நடப்பட்டுள்ளன. பூங்காவின் உட்பகுதியில் ஆழமாக வேர்கள் செல்லும் மரங்களும் நடப்பட்டுள்ளன. தற்போது பூங்காவில் சுமார் 5,400 மரங்கள்நடப்பட்டு நன்கு வளர்ந்துள்ளன.

தமிழறிஞரும், சுதந்திர போராட்டவீரருமான திரு.வி.கலியாண சுந்தரனார், தமிழுக்கு ஆற்றிய பங்களிப்பு மற்றும் சுதந்திரப் போராட்டத்தில் அவரது பங்கேற்பு ஆகிய கருப்பொருள் குறித்து 2 சுவர் சித்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் பூங்காவில், 3 மீட்டர் அகலம் மற்றும் 12 மீட்டர் உயரமுள்ள 12 விளக்குகள், இரவு நேரங்களில் புல்வெளிப் பகுதிக்கு அலங்கார விளக்குகள், வண்ணவிளக்குகள் மற்றும் இசையுடன் கூடிய நீரூற்றுகள், பொதுமக்கள் பயன்படுத்தும் பகுதி, பூந்தோட்டங்கள், அனைத்து பகுதிகளிலும் விளக்குகள், இருக்கை வசதிகள், குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.என்.நேரு, பி.கே.சேகர்பாபு, சென்னை மேயர் ஆர்.பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதிமாறன், கலாநிதி வீராசாமி, சிறப்பு முயற்சிகள் துறை செயலர் பிரதீப் யாதவ், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, சென்னை மெட்ரோ ரயில் மேலாண் இயக்குநர் எம்.ஏ.சித்திக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT