பாஜக மற்றும் இந்து இயக்கத்தைச் சேர்ந்தவர்களை கொலை செய்யப் போவதாக சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள இந்து முன்னணி அலுவலகத்துக்கு மிரட்டல் கடிதம் வந்துள்ளது.
வேலூரில் வெள்ளையப்பன், சேலத்தில் ஆடிட்டர் ரமேஷ் உட்பட பாஜக மற்றும் இந்து முன்னணியைச் சேர்நத நிர்வாகிகள் 6 பேர் தொடர்ச்சியாக கொலை செய்யப்பட்டனர்.
சென்னை அம்பத்தூரில் இந்து முன்னணி திருவள்ளூர் மாவட்டத் தலைவர் சுரேஷ்குமார் அண்மையில் கொலை செய்யப்பட்டார். அதற்கு சில நாட்களுக்கு முன்பு, சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள இந்து முன்னணி அலுவலகத்துக்கு ஒரு மிரட்டல் கடிதம் வந்தது. அதில் 9 பேரை கொலை செய்யப்போவதாக கூறப்பட்டிருந்தது. அதன்படியே சுரேஷ்குமார் கொலை செய்யப்பட்டார்.
இந்நிலையில், சிந்தாதிரிப் பேட்டையில் உள்ள இந்து முன்னணி அலுவலகத்துக்கு திங்கள்கிழமை மதியம் மீண்டும் ஒரு கடிதம் வந்தது. அதைப் படித்துப் பார்த்த இந்து முன்னணி நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர். இந்து இயக்கம் மற்றும் தமிழக பாரதிய ஜனதா தலைவர்களை கொலை செய்யப்போவதாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதுகுறித்து சிந்தாதிரிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் இந்து முன்னணி நிர்வாகிகள் செவ்வாய்க்கிழமை புகார் கொடுத்தனர். பாஜக, இந்து முன்னணியைச் சேர்ந்த சிலரது பெயர்களை ஒற்றை எழுத்தில் குறிப்பிட்டு, இவர்கள் அனைவரும் துன்பத்துக்கு ஆளாவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. ‘இம்மா மலை சகோதரர்கள், மத்வா குழு, பாலக்காடு, கேரளா’ என்ற முகவரியுடன் கடிதம் எழுதப்பட்டிருந்தது.
சுரேஷ்குமார் கொலை ஏற்படுத்திய பரபரப்பு அடங்கும் முன்பு இந்த மர்ம கடிதம் வந்திருப்பது போலீஸாருக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. கடிதம் அனுப்பியவர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மிரட்டல் கடிதத்தைத் தொடர்ந்து, இந்து முன்னணி அலுவலகத்துக்கும் கடிதத்தில் ஒற்றை எழுத்தில் மறைமுகமாக கூறப்பட்டிருக்கும் நபர்களுக்கும் போலீஸார் பாதுகாப்பு கொடுத்துள்ளனர்.