சென்னை: தமிழகத்தில் வார்டு மறுவரையறை தொடர்பாக ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
திருச்சியில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று (ஏப்.4) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "தமிழகத்தில் வார்டுகள் மறுவரையறை, மாநகராட்சி விரிவாக்கம் ஆகியவற்றை ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும். ஊரக உள்ளாட்சித் துறை அமைச்சருடன் ஆலோசித்த பின்பு, குழு அமைத்து வார்டுகள் மறுவரையறை செய்யப்படும்" என்று தெரிவித்தார்.
நாடாளுமன்ற தேர்தலுடன், சட்டமன்ற தேர்தலும் வரும் என்ற இபிஎஸ் பேச்சு தொடர்பான கேள்விக்கு, "அது அவருடைய ஆசை. நாளையே தேர்தல் வர வேண்டும் என்று அவர் நினைப்பார். எப்படி தேர்தல் வரும். அதற்கான வாய்ப்பு எங்கே உள்ளது?" என்றார். அதிமுக - பாஜக கூட்டணி தொடர்பாக கேள்விக்கு, "அரசியல் தொடர்பான கேள்விகளுக்கு தலைவர் தான் பதில் கூறுவார்" என்று தெரிவித்தார்.