காரைக்குடி: ராகுல் காந்தியை தகுதி இழப்புச் செய்ததன் மூலம் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணையும் வாய்ப்பை மோடி அரசு ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.
காரைக்குடியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ராகுல் காந்தி தகுதி இழப்புச் செய்யப்பட்டதை அனைத்து எதிர்க்கட்சிகளும் கண்டித்துள்ளன. ராகுல் காந்தி மீதான வழக்கு 3 ஆண்டுகள் கிடப்பில் இருந்தது. அதன்பிறகு புகார்தாரரே, தான் தொடர்ந்த அவதூறு வழக்குக்குத் தடை விதிக்க வேண்டுமென உயர் நீதிமன்றத்தை நாடினார். நீதிமன்றமும் 2022 மார்ச் முதல் 2023 பிப்ரவரி வரை அந்த வழக்கை விசாரிக்க தடை விதித்தது.
கடந்த பிப்.7-ம் தேதி ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் பிரதமர் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை ஆதாரங்களுடன் பேசினார். அதைத் தொடர்ந்து 9 நாட்களில், தான் தொடர்ந்த அவதூறு வழக்கு மீதான தடையை நீக்கிவிடுங்கள் என்று உயர் நீதிமன்றத்தில் புகார்தாரர் வழக்குத் தொடுக்கிறார். இதையடுத்து நீதிமன்றம் விசாரிக்க உத்தரவிட்டது.
சூரத் நீதிமன்றம் 30 நாட்களில் விசாரணையை முடித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. தண்டனை விதித்த நீதிபதியே தண்டனையை நிறுத்தி வைக்கிறார். தண்டனையை நிறுத்தி வைத்திருக்கும்போது ராகுல் காந்தி எம்.பி. பதவியைத் தகுதி இழப்புச் செய்கின்றனர்.
எதிர்க்கட்சிகள் ஒருங்கிணையும் வாய்ப்பை மோடி அரசு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. ராகுல் காந்தியை தகுதி இழப்பு செய்தது கர்நாடகா தேர்தலில் எதிரொலிக்கும். மாநில தேர்தல் முடிவுகள் மக்களவைத் தேர்தலிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
காலம் முடிந்தும் சுங்கக் கட்டணத்தை வசூலிப்பது மிகப்பெரிய நிர்வாகக் கோளாறு. மக்களவைத் தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தல் வரும் என நினைப்பது அவரவர் ஆசை.
தமிழக நிதிநிலை அறிக்கையில் ரூ.30 ஆயிரம் கோடி வருவாய் பற்றாக்குறையை குறைத்துள்ளனர். இதற்காக நிதி அமைச்சரை பாராட்டுகிறேன். பெண்களுக்கு உரிமைத் தொகை அறிவித்ததை வரவேற்கிறேன் என்று கூறினார். பேட்டியின்போது கார்த்தி சிதம்பரம் எம்.பி., மாங்குடி எம்எல்ஏ உள்ளிட்டோர் உடனிருந்தனர்.