தமிழகம்

கோவையில் 5,000 தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய முடிவு

செய்திப்பிரிவு

கோவை: கோவை மாநகரில் மேலும் இரு இடங்களில் தெரு நாய்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சை மையங்கள் தொடங்கப்பட உள்ளன. 5 ஆயிரம் தெருநாய்களுக்கு கருத்தடை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

கோவை மாநகரில் தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய சீரநாயக்கன்பாளையம், ஒண்டிப் புதூர் ஆகிய இடங்களில் மையங்கள் செயல்படுகின்றன.

இந்நிலையில், பெருகிவரும் தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த, மேலும் இரு இடங்களில் கருத்தடை அறுவை மையம் தொடங்கப்பட உள்ளதாக மாநகராட்சி பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, ‘‘மாநகரில் தற்போது 1.21 லட்சம் எண்ணிக்கையிலான தெருநாய்கள் உள்ளதாக கணக்கெடுப்பின் மூலம் தெரியவந்துள்ளது.

பிரத்யேக வாகனங்கள் மூலம் தெருநாய்கள் பிடிக்கப்பட்டு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது.

இப்பணியை தீவிரப்படுத்தவும், விரைவாக முடிக்கவும் ரூ.50 லட்சம் மதிப்பில் மாநகரில் வடக்கு மண்டலம் மற்றும் தெற்கு மண்டலங்களில் தலா ஒரு கருத்தடை அறுவை மையம் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான இடம் தேர்வு, தகுந்த நிறுவனம் தேர்வு உள்ளிட்ட பணிகள் அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் மூலம் நடப்பு நிதியாண்டில் மாநகரில் 5 ஆயிரம் தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது’’ என்றனர்.

SCROLL FOR NEXT