தமிழகம்

2022-23-ல் சென்னை ஐசிஎஃப்-ல் 2,702 ரயில் பெட்டி தயாரிப்பு

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை பெரம்பூர் ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலையில் (ஐசிஎஃப்) கடந்த நிதியாண்டில் (2022-23) 2,261 எல்.எச்.பி. பெட்டிகள் உட்பட
மொத்தம் 2,702 பெட்டிகள் தயாரித்து சாதனை படைக்கப்பட்டுள்ளது.

இந்த ரயில் பெட்டித் தயாரிப்புத் தொழிற்சாலையில் 1955-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை 500-க்கும் மேற்பட்ட வடிவமைப்புகளில், 70 ஆயிரத்துக்கும் அதிகமான ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதுதவிர, “ரயில்- 18’ திட்டத்தில் ‘வந்தே பாரத்’ அதிவேக ரயிலுக்கு உலகத் தரத்தில் ரயில் பெட்டிகள் தயாரித்து வழங்கப்படுகின்றன.

கரோனா தொற்று காரணமாக, ஐசிஎஃப்-ல் கடந்த 2020-21-ம் நிதியாண்டில் ரயில் பெட்டிகள் தயாரிப்பு குறைந்தது. தொடர்ந்து, தயாரிப்பு அதிகரிக்கப்பட்டு, 2021-22-ம்- நிதியாண்டில் 3,101 ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டன.

இந்நிலையில், சென்னை ஐசிஎஃப்-ல் 2022-23-ம் நிதியாண்டில் 2,702 பெட்டிகள் தயாரித்து வழங்கப்பட்டுள்ளன. ஏசி மின்சார ரயில்களுக்கான 2 ரயில் தொடர்கள், 8 மின்சார ரயில் தொடர்கள், நெடுஞ்தொலைவு மின்சார ரயில்களுக்கான (மெமு) 3 தொடர்கள், 12 வந்தே பாரத் ரயில் தொடர்கள், 2,261 எல்.எச்.பி. என்னும் நவீன பெட்டிகள், டீசல் மின்தொடருக்கான 7 பெட்டிகள், ரயில்கள் ஆய்வுக்கான 11 பெட்டிகள், 5 விபத்து நிவாரண ரயில் தொடர்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு மொத்தம் 2,702 பெட்டிகள் தயாரித்து சாதனை படைத்த ரயில்வே ஊழியர்கள், அதிகாரிகளை ஐசிஎஃப் பொதுமேலாளர் பி.ஜி.மால்யா பாராட்டினார்.

2021-22-ம் நிதியாண்டைவிட 2022-23-ம் நிதியாண்டில் ரயில் பெட்டி தயாரிப்பு சற்று குறைந்துள்ளது. இதுகுறித்து ஐசிஎஃப் அதிகாரிகளிடம் கேட்டபோது, “நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்களுக்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது. இந்த ரயில்கள் தயாரிப்பில் ஐசிஎஃப் தீவிர கவனம் செலுத்துகிறது.

வழக்கமான ரயிலைவிட வந்தே பாரத் ரயில் தயாரிப்புக்கு அதிக நேரம் தேவைப்படுவதால், ரயில் பெட்டிகள் தயாரிப்பு சற்று குறைந்துள்ளது. இருப்பினும், வரும் ஆண்டில் கூடுதல் ரயில் பெட்டிகள் தயாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது” என்றனர்.

SCROLL FOR NEXT