அண்ணாமலை | கோப்புப்படம் 
தமிழகம்

நாகர்கோவில் பாஜக அலுவலகம் மீது தாக்குதல்: காங்கிரஸை கடுமையாக சாடிய அண்ணாமலை

செய்திப்பிரிவு

சென்னை: "அழிவின் விளிம்பிலிருக்கும் காங்கிரஸ் கட்சி, இதுபோன்ற ஜனநாயகத்துக்கு விரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும், பாஜக தொண்டர்கள் சட்டத்துக்கு உட்பட்டு அமைதி காக்க வேண்டும்" என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "நாகர்கோவில் பாஜக அலுவலகத்தின் மீதும் தொண்டர்கள் மீதும் தமிழக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரவுடிகள் கல்லெறிந்து தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். காங்கிரஸ் கட்சி தனது இருப்பைக் காட்ட இதுபோன்ற வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது வெட்கக்கேடானது.

தமிழக காவல் துறை உடனடியாக பாஜக அலுவலகம் மீது தாக்குதல் நடத்திய சமூக விரோதிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
அழிவின் விளிம்பிலிருக்கும் காங்கிரஸ் கட்சி, இதுபோன்ற ஜனநாயகத்துக்கு விரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும், பாஜக தொண்டர்கள் சட்டத்துக்கு உட்பட்டு அமைதி காக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள பாஜக அலுவலகத்தின் முன் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அந்த பகுதியின் சாலையில் திரண்ட இருதரப்பினரும் கற்களை வீசி தாக்கிக் கொண்டனர். இச்சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

SCROLL FOR NEXT