இந்திய குடியரசு கட்சி சார்பில் சென்னையில் நடைபெற்ற பேரணியை கட்சியின் தலைவரும் மத்திய இணையமைச்சருமான ராம்தாஸ் அத்வாலே நேற்று தொடங்கி வைத்தார். உடன் கட்சியின் மாநில தலைவர் எம்.ஏ.சூசை உள்ளிட்டோர் உள்ளனர். படம்: பு.க.பிரவீன் 
தமிழகம்

தமிழகத்தில் சாதிய படுகொலையை தடுக்க வேண்டும் - முதல்வருக்கு மத்திய இணையமைச்சர் ராம்தாஸ் அத்வாலே வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் சாதிய படுகொலையைத் தடுக்க வேண்டும் என தமிழக முதல்வரை மத்திய இணையமைச்சர் ராம்தாஸ் அத்வாலே வலியுறுத்தியுள்ளார்.

இந்திய குடியரசு கட்சியின் தேசிய பொதுக்குழு கூட்டம், சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிறகு மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சரும், கட்சியின் தேசிய தலைவருமான ராம்தாஸ் அத்வாலே செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அவர் கூறியதாவது: வரும் 2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலிலும் இந்திய குடியரசு கட்சி பாஜகவை ஆதரிக்கிறது. 350 இடங்களைக் கைப்பற்றி, என்டிஏ கூட்டணியே மீண்டும் ஆட்சியமைக்கும்.

இந்திய ஒற்றுமை பயணத்தை ராகுல்காந்தி மேற்கொண்டார். ஆனால் 67 ஆண்டுகளுக்கு மேலாக அவர்கள் ஆட்சியில் இருந்த போது சாதி பிரிவினையை தடுக்க தவறியது ஏன் என்ற கேள்வியை அவரிடம் முன்வைக்கிறேன். மேற்கு வங்கத்தில் நடைபெறும் இந்து-முஸ்லிம் கலவரங்களுக்கு அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜிதான் பொறுப்பேற்க வேண்டும். அதுவே கணிசமாக முஸ்லிம்கள் இருக்கும் உத்தர பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. அங்கு இதுபோன்ற கலவரங்கள் நிகழ்வதில்லை. ஏனெனில் பாஜக முஸ்லிம் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி அல்ல. இதனாலேயே 8 சதவீத சிறுபான்மையினர் வாக்குகள் கிடைத்தது. நாங்களும் அவர்களுடன் கூட்டணியில் இருக்கிறோம். மேலும், சட்டங்களை பாஜக மாற்றுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

பாஜக அரசமைப்புக்கு எதிரான கட்சியும் அல்ல. எம்.பி. பதவியில் இருந்து சட்டப்படியே ராகுல்காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது மத்திய அரசின் முடிவல்ல. மக்களவைச் செயலரின் முடிவு. ராகுல்காந்தியை தொந்தரவு செய்யும் எண்ணம் பாஜகவுக்கு இல்லை.

தமிழகத்தின் கன்னியாகுமரியில் சட்டமேதை அம்பேத்கரின் சிலை அமைக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை வைக்கிறோம். இது தொடர்பாக அவருக்கு கடிதமும் அனுப்ப இருக்கிறேன். அதே நேரம் இங்கு சாதி மறுப்பு திருமணம் செய்வோருக்கு பாதுகாப்பற்ற சூழல் இருக்கிறது. இங்கு நிகழும் சாதிய படுகொலைகளைத் தடுக்க வேண்டும் என முதல்வருக்கு கோரிக்கை விடுக்கிறேன்.

திமுக ஆட்சியில் பட்டியலினத்தவர்களுக்கு எதிரான தாக்குதல் நடக்கிறது என பார்க்க முடியாது. சாதிய பிரிவினையாலேயே சிறுபான்மை மக்கள் தாக்கப்படுகின்றனர். இதைத் தடுக்கும் பொறுப்பு அரசுக்கும் முதல்வருக்கும் உள்ளது. இத்தகைய வன்முறையை தடுக்க அரசு திட்டம் வகுத்து செயல்பட வேண்டும். மேலும் அனைத்து பட்டியலின சமூக மக்களுக்கான தலைவர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என அழைப்பு விடுக்கிறேன்.

தமிழகத்தில் அதிமுக, பாஜக கூட்டணியை ஆதரிக்கிறோம். இந்த கூட்டணி மக்களவைத் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெறும். இங்கு 50 சதவீதம் சிறுபான்மையினர் பாஜகவுக்கு ஆதரவாகவே உள்ளனர்.

தமிழகத்தில் பணிபுரியும் 17 ஆயிரம் ஊர்க்காவல் படையினரை நிரந்தரப்படுத்த வேண்டும். புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பாதுகாப்பளிக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இச்சந்திப்பின்போது, இந்திய குடியரசு கட்சியின் மாநிலத் தலைவர் எம்.ஏ.சூசை உடன் இருந்தார்.

SCROLL FOR NEXT