திருநெல்வேலி: விசாரணைக்கு அழைத்து செல்லப்படுவோரின் பற்களை பிடுங்கியதாக ஏஎஸ்பி பல்வீர்சிங் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், 2 காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டவர்களின் பற்களை பிடுங்கியதாக ஏஎஸ்பி பல்வீர்சிங் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அவர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார். இவ்விவகாரம் தொடர்பாக சேரன்மகாதேவி சார்ஆட்சியர் முகமது சபீர் ஆலம் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. மனித உரிமைகள் ஆணையமும் தனியாக விசாரணை நடத்துகிறது.
ஏஎஸ்பிக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு தரப்பினர் கருத்துகள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், விக்கிரமசிங்கபுரம் தனிப்பிரிவு காவலர் போக பூமன், கல்லிடைக்குறிச்சி தனிப்பிரிவு காவலர் ராஜ்குமார் ஆகியோரை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் உத்தரவிட்டுள்ளார். ஏஎஸ்பி மீதான குற்றச்சாட்டு குறித்து அதிகாரிகளுக்கு உரிய தகவல் அளிக்காததால் இவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆர்ப்பாட்டம்: திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சார்பில் ஏஎஸ்பிபல்வீர்சிங்குக்கு எதிராக நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பல்வீர்சிங் மீது குற்ற வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்ய வேண்டும். இதுதொடர்பாக பணியில் உள்ள நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.