கிருஷ்ணகிரி: சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, ஓசூர் உத்தனப் பள்ளியில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயி களுக்கு ஆதரவாகக் கிருஷ்ணகிரியில் நாம் தமிழர் கட்சி சார்பில் உண்ணாவிரதம் நடைபெற்றது.
ஓசூர் அருக்கே உத்தனப்பள்ளி, நாகமங்கலம், அயர்னப்பள்ளி ஊராட்சிகளில் 5-வது சிப்காட் அமைக்க விளை நிலங்களைக் கையகப்படுத்துவதைக் கைவிடக்கோரியும், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் உத்தனப்பள்ளியில் நேற்று 89-வது நாளாக விவசாயிகள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், விவசாயி களுக்கு ஆதரவாக, நேற்று கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள அண்ணாசிலை எதிரில் நாம் தமிழர் கட்சி சார்பில், உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.
மண்டலச் செயலாளர் பிரபாகரன், மாவட்ட இளைஞர் பாசறைச் செயலாளர் சிவராமன் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட செயலாளர் வேல் கணேசன், வேப்பனஅள்ளி தொகுதிச் செயலாளர் சிவசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநிலப் பொருளாளர் ராவணன், மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ஜெகதீச பாண்டியன், ராசா அம்மையப்பன், மாநில இளைஞர் பாசறைச் செயலாளர் இடும்பாவனம் கார்த்திக் மற்றும் விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.