செங்கல்பட்டு: செங்கல்பட்டில் ரூ.119.21 கோடியில் கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திறக்கப்படாதது குறித்துமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தை பிரித்து செங்கல்பட்டை தலைமையிடமாகக் கொண்டு கடந்த 2019 நவம்பர், 29-ம் தேதி தமிழகத்தின் 37-வது மாவட்டமாக செங்கை மாவட்டம் உதயமானது. மாவட்ட நிர்வாகத்துக்கு புதிய ஆட்சியர் அலுவலகம் கட்ட, ரூ.119.21 கோடி நிதி ஒதுக்கப்பட்டு வேன்பாக்கத்தில் அடிக்கல் நாட்டப்பட்டது. 27,062 ச.மீ. பரப்பில், தரை மற்றும் 4 தளங்களுடன் ஆட்சியர் அலுவலகமும் கட்டி முடிக்கப்பட்டது. ஆனாலும், திறக்கப்படவில்லை.
புதிய கட்டிடம் அமைந்துள்ள ஒரு பகுதி தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வரும் இடம் என தெரிய வந்துள்ளது. இதையடுத்து தொல்லியல் துறையிடம் தடையில்லா சான்று வேண்டி மாவட்ட நிர்வாகம் சார்பில், அனுமதி கோரப்பட்டுள்ளது. அதற்கான அனுமதி கிடைக்காததால் அலுவலகம் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செயல்படாமல் இருப்பதால், கோப்புகளை வைப்பதற்கு கூட இடமில்லாமல் அதிகாரிகள் அவதிப்பட்டு வருகின்றனர். ஒவ்வொரு அலுவலகத்துக்கும் தேடித்தேடி அலையும் சூழலுக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதன்காரணமாக மாவட்ட நிர்வாக பணி களில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திறக்கப்படாததை கண்டித்து அதிமுக சார்பில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் இதில் முன்னாள் முதல்வர் பழனிசாமி பங்கேற்க இருப்பதாகவும் அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
புதிய ஆட்சியர் அலுவலகம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டபோதே, அந்த இடம் தொல்லியல் துறைக்கு சொந்தமானது என்பது தெரியும். அப்பொழுதே தடையில்லா சான்று பெற அதிமுக அரசு தவறிவிட்டது. தற்போது திமுக ஆட்சி அமைந்துள்ள நிலையில் அனுமதி வழங்குவதில் மத்திய அரசு காலதாமதம் செய்வதாக புகார் எழுந்துள்ளது.
எனவே, தமிழக அரசு நேரடியாக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தால் தடையில்லா சான்று கிடைக்க வாய்ப்பு உள்ளதாக அரசு அலுவலர் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.