தமிழகம்

சிறுசேரியில் 3-வது பணிமனை: மெட்ரோ ரயில் நிறுவனம் பரிசீலனை

செய்திப்பிரிவு

சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், 3-வது மெட்ரோ ரயில்பணிமனை சிறுசேரியில் அமைப்பது தொடர்பாக மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர்.

சென்னையில், இரண்டாம் கட்டமெட்ரோ ரயில் திட்டம் ரூ.63,246 கோடியில் மாதவரம்-சிறுசேரி சிப்காட்(45.8 கி.மீ.) 3-வது வழித்தடம், கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி(26.1 கி.மீ.), மாதவரம்-சோழிங்கநல்லூர்(45.5 கி.மீ) ஆகிய 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது.

இந்த வழித்தடங்களில் மூன்று பெட்டிகளை கொண்ட 138 மெட்ரோ ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ரயில்களை பராமரிக்க மாதவரம் மற்றும் பூந்தமல்லியில் மெட்ரோ ரயில் பணிமனை அமைக்கப்படுகிறது. இதற்கான, பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், மூன்றாவது மெட்ரோ ரயில் பணிமனை சிறுசேரியில் அமைக்க சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர். மாதவரம்-சிறுசேரி சிப்காட் வரை 3-வது வழித்தடத்தின் ஒரு பகுதியாக பணிமனை கட்ட முன்பு திட்டமிடப்பட்டது. ஆனால், திட்ட செலவைக் குறைக்கும் நோக்கில் ரத்து செய்யப்பட்டது. தற்போது, சிறுசேரியில் பணிமனை அமைக்க பரிசீலிக்கப்படுகிறது.

ஒரு நீண்ட வழித்தடத்தில் ஒருபணிமனை இருப்பது சிறப்புமிக்கது. தினமும் காலையில், சிறுசேரி சிப்காட் நிலையத்திலிருந்து செல்லும் பயணிகள் எண்ணிக்கையை பொறுத்து செயல்படத் தொடங்குவது எளிதாகும்.

பணிமனைக்கு பதிலாக இரவில் ரயில்களை நிறுத்துவதற்கு நிலையான பாதை மட்டும் அமைக்கப்படுகிறது. ரயில்களை சுத்தம் செய்ய மற்றும் பராமரிக்க மாதவரம் பணிமனைக்கு சென்று திரும்பி, சேவையை சிறுசேரியில் தொடங்க வேண்டும். எனவே, சிறுசேரியில் பணிமனை அமைக்க பரிசீலனை செய்யப்படுகிறது என்று மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT