நெல்லுக்கு ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்தை முதன்முதலில் அறிவித்ததே திமுக ஆட்சிதான் என்று கருணாநிதி கூறியுள்ளார்.
இதுகுறித்து திமுக தலைவர் கருணாநிதி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நெல் கொள்முதலுக்கு மாநில அரசுகள் ஊக்கத் தொகை வழங்கக் கூடாது என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுபற்றி ஏற்கெனவே விவரமாக அறிக்கை கொடுத்திருக்கிறேன். இந்த ஊக்கத் தொகை கொடுக்கின்ற வரலாறே எப்படி ஆரம்பமானது என்பதை கூற விரும்புகிறேன்.
மத்திய வேளாண் துறை அமைச்சராக பாபு ஜெகஜீவன்ராம் இருந்தபோது, நெல் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக விவசாயிகள் என்னிடம் தெரிவித்தனர். அவர்களின் சார்பாக டெல்லி சென்று மத்திய அமைச்சரிடம் அதுபற்றி பேசினேன்.
‘கொள்முதல் விலையை அதிகப்படுத்தித் தர இயலாது. வேண்டுமானால் ஊக்கத் தொகை, போக்குவரத்துச் செலவு என்ற பெயரால் மாநில அரசே ஒரு தொகையைக் கொடுக்கலாம்’ என்று ஜெகஜீவன்ராம் தெரிவித்தார். அதன்பிறகு, நாட்டிலேயே முதன்முதலாக தமிழகத்தில்தான் விவசாயிகளுக்கு 15 ரூபாய் ஊக்கத் தொகை என்ற பெயரில் தமிழக அரசு அளித்தது. அதற்குத்தான் தற்போது மத்திய அரசால் ஆபத்து வரும்போல் இருக்கிறது.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை தமிழக அரசே எடுத்துக் கொண்ட போதிலும், அங்கே மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு நடத்துவதாகவும், கல்விக் கட்டணம் அதிகமாக இருப்பதாகவும் சொல்கிறார்கள். இதுபற்றி பலமுறை பல தரப்பினராலும் சொல்லப்பட்ட போதிலும், இந்த அரசு அதைக் காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை.
கல்வித்துறை மானியத்தின் மீது பல அறிவிப்புகளை எதிர்பார்த்த ஆசிரியர்கள், எந்த முக்கிய அறிவிப்பும் வராத நிலையில் ஏமாந்திருப்பதாகக் கூறப்படுகிறது. இடைநிலை ஆசிரியர் நியமனம் தொடர்பாக அமைச்சர் எதுவும் கூறாததால் தகுதித் தேர்வில் வெற்றி பெற்று வேலை கிடைக்குமென்று நம்பிக்கையோடு காத்திருக்கும் இடைநிலை ஆசிரியர்கள் பெரும் ஏமாற்றத்தில் இருக்கிறார்கள்.
இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.