கிருஷ்ணகிரி: காலாவதியான சுங்கச்சாவடிகளை மூடக்கோரியும், சுங்கக் கட்டண உயர்வைக் கண்டித்தும், கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி முன்பு கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைந்த லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் பாஸ்கரன் தலைமை வகித்தார்.
இதில், அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் தலைவர் சண்முகப்பா பேசியதாவது: நாடு முழுவதும் 750-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் 400-க்கும் மேற்பட்டவை காலாவதியாகி விட்டன. தமிழகத்தில் 54 சுங்கச்சாவடிகளில் 32 காலாவதியாகி விட்டன. ஆனால், அவற்றில் சுங்கக் கட்டணம் வசூலிக்கின்றனர். நாங்கள் சுங்கக் கட்டணத்தை எதிர்க்கவில்லை. சுங்கச்சாவடிகளை தான் எதிர்க்கிறோம். நாட்டில் 1 கோடிக்கு அதிகமான கனரக வாகனங்களில் 80 லட்சம் வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலைகளில் செல்கின்றன.
பிற வரிகளைச் செலுத்துவதைப்போல, ஆண்டுக்கு ஒருமுறை சுங்கக்கட்டணமாக ரூ.80 ஆயிரம் நாங்கள் செலுத்திவிடுகிறோம். இதன் மூலம் அரசுக்கு வட்டி கிடைக்கும். மேலும், காலாவதியான சுங்கச் சாவடிகளை அகற்ற முதல்வர் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். லாரி உரிமையாளர்கள் மட்டும் தான் ஒரு நாளைக்கு சுமார் ரூ.4 ஆயிரம் வரி செலுத்துகின்றனர். மத்திய, மாநில அரசுகள் சுங்கச்சாவடியை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.