தாம்பரம்: தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஆர்.டி.ஓ-வாக செந்தில் வேலன், ஆய்வாளராக சோம சுந்தரம் ஆகியோர் பணியாற்றி வந்தனர். இதனிடையே கடந்த 29-ம் தேதி ஆர்டிஒ நீதிமன்ற பணிக்கு சென்று விட்டார்.
ஆய்வாளர் சோம சுந்தம் மட்டும் பணியில் இருந்தார். அன்று ஒருநாள் மட்டும் சுமார் 400 விண்ணப்பங்களுக்கு சோமசுந்தரம் அனுமதி வழங்கியுள்ளார். அதில் ஓட்டுநர் பயிற்சி 100 விண்ணப்பம், புதிய வாகன பதிவு- 200, வாகன தகுதிச் சான்று - 35, எல்எல்ஆர்- 40, பேட்ஜ் - 15, ரிவேல்யூ-10 ஆகிய விண்ணப்பங்களை ஒரே நாளில் அனுமதி வழங்கியதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக ஏராளமான புகார்கள் போக்குவரத்து ஆணையருக்கு சென்றது. இந்நிலையில் கடந்த 30-ம் தேதி போக்குவரத்து ஆணையர் நிர்மல் ராஜ், கூடுதல் ஆணையர் மணக்குமார் ஆகியோர் நேற்று தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 29-ம் தேதி வரபெற்ற விண்ணப்பங்களை ஆய்வு செய்தனர்.
இந்நிலையில் வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில் வேலன் 31-ம் தேதி பணியிலிருந்து விடுவிக்கப்பட்டார். இதை தொடர்ந்து சோழிங்க நல்லூர் ஆர்டிஓ யுவராஜ் கூடுதல் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளார். இதனிடையே முறைகேட்டில் ஈடுபட்டதாக ஆய்வாளர் சோம சுந்தரம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக புதிய ஆய்வாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் போக்குவரத்து வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே தமிழகம் முழுவதும் அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகத்திலும் ஓட்டுநர் உரிமம் இதுவரை எவ்வளவு வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்தும் தினமும் எத்தனை வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்தும் அறிக்கை தர ஆணையர் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.