சென்னை: அதிமுக ஆட்சியில் டான் டீ நிறுவனத்தின் 1,907 ஹெக்டேர் நிலம்வனத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், தற்போது அந்நிறுவனத்தை நஷ்டத்தில் இருந்துகாப்பாற்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அமைச்சர் மதிவேந்தன் கூறினார்.
சட்டப்பேரவையில் நேற்று நேரமில்லா நேரத்தில் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, “டான் டீ நிறுவனத்துக்குச் சொந்தமான, கோவை வால்பாறை, நீலகிரி நடுவட்டம், கூடலூர், குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் உள்ள தேயிலைத் தோட்டங்களின் சில பகுதிகளையும் சேர்த்து 5,317 ஹெக்கர் தேயிலைத் தோட்டங்களை வனத் துறையிடம் ஒப்படைக்க அரசாணை போடப்பட்டுள்ளது.
இதை எதிர்த்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், கடந்த மார்ச் 29-ம் தேதி நெல்லியாளம் பகுதியில் 40 ஆண்டுகள் வளர்த்து உருவாக்கப்பட்ட தேயிலைச் செடிகளை, அகற்றும் பணியில் வனத் துறை ஈடுபட்டுள்ளது. இதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
கோவை வால்பாறை, நீலகிரிமாவட்டத்தில் டான் டீ நிறுவனத்துக்குச் சொந்தமான குடியிருப்புகளை காலிசெய்ய நிர்பந்திக்கப்படுகிறது. இதனால் தொழிலாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும். எனவே, அரசாணையை ரத்து செய்ய வேண்டும்’’ என்றார்.
சுற்றுலாத் துறை அமைச்சர் ராமச்சந்திரன் பேசும்போது, ‘‘1967-ல் தொடங்கப்பட்ட டான் டீ நிறுவனத்தில் 16,000 பேர் பணியாற்றி வந்தனர். அவர்களின் பிள்ளைகள் படித்து முடித்து, வெவ்வேறு வேலைகளுக்குச் சென்றதால் தற்போது பணியாளர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. 2017-ல் ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு, தற்போதைய திமுக ஆட்சியில்தான் ரூ.29 கோடி பணப்பயன்கள் வழ்ஙகப்பட்டன.
பணியாளர்களுக்கு அரசு செலவில் தற்போது வீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளாக எந்த உரமும் போடாததால், அங்கு விளையும் தேயிலைக்கு நல்ல விலை கிடைப்பதில்லை. எனவே, மண் பரிசோதனைஉள்ளிட்டவற்றுக்கு ரூ.4 கோடி நிதியை முதல்வர் ஒதுக்கியுள்ளார்’’ என்றார்.
தொடர்ந்து, அரசாணையை ரத்து செய்யுமாறு அதிமுக பொன்.ஜெயசீலன் வலியுறுத்தினார். பின்னர், அமைச்சர் மதிவேந்தன் பேசியதாவது:
1964-ல் டான் டீ நிறுவனத்துக்கு வனத் துறையின் 6,496.52 ஹெக்டேர் நிலம் குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டது. அங்கு சுமார் 14,100 பேர் பணியாற்றினர். ஆனால்,தற்போது பணியாளர்கள் எண்ணிக்கை குறைந்துவிட்டது. 2012முதல் 2019 வரை அதிமுக ஆட்சியில், பல்வேறு கட்டங்களாக டான்டீ நிலம் 1,907 ஹெக்டேர் வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள 4,000ஹெக்டேர் தோட்டத்தைப் பராமரிக்க 7,000 பேர் தேவை. ஆனால், 3,800 தொழிலாளர்கள், 180 டான் டீ அலுவலர்கள் மட்டுமே உள்ளனர்.
அரசாணையின்படி 599 ஹெக்டேர் நிலம் மட்டுமே வனத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளளது. மீதமுள்ள 3,900 ஹெக்டேர் டான்டீ நிறுவனத்திடம்தான் உள்ளது. அந்த நிலத்தை ஆய்வுசெய்து மேம்படுத்த ரூ.4 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுதவிர, ஒய்வுபெற்றவர்களுக்கு நிலுவையில் இருந்த ரூ.29.38 கோடி பணப் பயனும் வழங்கப்பட்டுள்ளது. தலா ரூ.14 லட்சம் மதிப்பிலான வீட்டை, பயனாளியின் பங்களிப்பையும் அரசே ஏற்று, 573 பேருக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.13.40 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
டான் டீ நிறுவனத்தில் நஷ்டம்ஏற்படுவதை தடுத்து, அந்நிறுவனத்தை சீரமைக்க அரசு பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது என்றார்.