சென்னை: திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் காவல் உதவி கண்காணிப்பாளராக பல்வீர் சிங் பொறுப்பு வகித்து வந்தார். இவர் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுவோரின் பற்களை பிடுங்கி தண்டனை அளித்து வந்ததாக சர்ச்சை எழுந்தது. தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தது. மேலும் விசாரணை நடத்தி ஆறு வாரங்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் ஆணையத்தின் புலனாய்வு பிரிவு ஐ.ஜி.,க்கு ஆணையத் தலைவர் நீதிபதி பாஸ்கரன் உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து தொடர்ந்து ஆணையத்தின் புலனாய்வு பிரிவு எஸ்.பி., மகேஸ்வரன் விசாரணையை தொடங்கினார். அவர், பாதிக்கப்பட்ட செல்லப்பா, இசக்கிமுத்து, சுபாஷ், வேதநாராயணன் உள்ளிட்டோரிடம் நேற்று சென்னையில் உள்ள ஆணையத்தில் விசாரணை நடத்தினார். அவர்களுடன் வழக்கறிஞர் மகாராஜனும் உடன் இருந்தார். இந்த விசாரணையின் அடிப்படையில் பல்வீர் சிங் உள்ளிட்டோரிடம் அடுத்தகட்ட விசாரணை நடத்தப்படவுள்ளது.
இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறும்போது, “விசாரணை நம்பிக்கை அளிக்கும் விதத்தில் உள்ளது. ஏஎஸ்பி பல்வீர் சிங்குக்கு ஆதரவாக உள்ளூர் அதிகாரிகள் பலரும் இப்போது வரை எங்களுக்கு மிரட்டல் விடுத்து வருகின்றனர். இதை கவனத்தில் கொண்டு அரசு செயல்பட வேண்டும்" என்றனர்.