கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ராகி கொள்முதல் நிலையங்களை நிரந்தரமாகச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சூளகிரி, ஓசூர், தளி, தேன்கனிக் கோட்டை, கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி, பர்கூர் உள்ளிட்ட பகுதிகளில் 45 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் விவசாயிகள் ராகி சாகுபடி செய்து வருகின்றனர்.
இதில், ஹெக்டேருக்கு, 1.5 டன் முதல் 2 டன் வரை மகசூல் கிடைக்கிறது. இங்கு உற்பத்தியாகும் ராகி தமிழகம் மட்டுமின்றி வட மாநிலங்களுக்கும் விற்பனைக்குச் செல்கிறது.
இந்நிலையில், தமிழக அரசு ராகி விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் முதல்கட்டமாக நீலகிரி, தருமபுரி மாவட்ட ரேஷன் கடைகளில் அரிசிக்குப் பதில் ராகி வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்காகக் கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகளிடம் நேரடியாக ராகி கொள்முதல் செய்ய சூளகிரி தாலுகா சாமனப்பள்ளி, செட்டிப்பள்ளி, தேன்கனிக் கோட்டை தாலுகா பேளகொண்டப் பள்ளி, கெலமங்கலம், ஓசூர் தாலுகா பாகலூர், தளிசாளிவரம் ஆகிய இடங்களில் ராகி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன.
இந்நிலையில், ராகி கொள்முதல் நிலையங்கள் நேற்றுடன் மூடப்பட்டன என ஆட்சியர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார். இதனிடையே கொள்முதல் நிலையங்களை நிரந்தரமாகச் செயல்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் ராமகவுண்டர் கூறும்போது, “மாவட்டத்தில் இரவை சாகுபடியாக ராகி அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இந்நிலையில், ராகி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டதால், விவசாயிகள் வழக்கத்தைவிட அதிகளவில் ராகி பயிரிட்டுள்ளனர். தற்போது ராகி பயிரில் கதிர்கள் நன்கு வளர்ந்து வரும் நிலையில் கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டுள்ளது வேதனையளிக்கிறது. எனவே, ராகி கொள்முதல் நிலையங்களை நிரந்தரமாகச் செயல்படுத்த நட வடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
அரசுக்கு கருத்துரு: இதுதொடர்பாக வேளாண் அதிகாரிகள் கூறும்போது, “தொடர்ந்து ராகி கொள்முதல் நிலையங்களை செயல்படுத்த அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலும், மாவட்டம் முழுவதும் ராகி பரப்பளவு கணக்கீடு செய்து ராகி கொள்முதல் நிலையங்கள் கூடுதலாகத் திறக்கவும் கருத்துரு அனுப்பி வைக்கப்படும்” என்றனர்.