தமிழகம்

2022-23 நிதியாண்டில் சொத்து, தொழில் வரி ரூ.2,039 கோடி வசூலித்தது மாநகராட்சி

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை மாநகராட்சி 2022-23 நிதியாண்டில் சொத்து மற்றும் தொழில் வரியாக ரூ.2,039 கோடி வசூலித்துள்ளது. சென்னை மாநகரில் மொத்தம் 13 லட்சத்து 33 ஆயிரம் சொத்து உரிமையாளர்கள் உள்ளனர். அவர்களில் கடந்த மார்ச் 22-ம் தேதி நிலவரப்படி 8 லட்சத்து 85 ஆயிரம் உரிமையாளர் தங்களது சொத்து வரியை முழுமையாக செலுத்திஇருந்தனர். கடைசி நாட்களில் தினமும் 8 ஆயிரம் பேர் சொத்துவரியை செலுத்தி வந்தனர்.

கடந்த 2022-23 நிதியாண்டில் ரூ.1,500 கோடிக்கு சொத்து வரி வசூலிப்பது என மாநகராட்சி வருவாய்த்துறை இலக்கு நிர்ணயித்திருந்தது. கடந்த மார்ச் 22-ம் தேதி நிலவரப்படி ரூ.1,409 கோடி வசூல் செய்யப்பட்டிருந்தது. 31-ம் தேதிக்குள் மீதமுள்ள ரூ.91 கோடிவசூலிக்கமாநகராட்சி திட்டமிட்டிருந்தது.

அதன்படி, சொத்துவரி நிலுவை வைத்துள்ள உரிமையாளர்களுக்கு குறுந்தகவல், குரல் ஒலி அழைப்புகள், வாட்ஸ்-அப் ஆகியவை மூலம்சொத்துவரி செலுத்த கோருதல், மாநகராட்சி நிறுவியுள்ள அறிவிப்பு பலகைகளில் சொத்து வரி செலுத்துவது தொடர்பாக விழிப்புணர்வு செய்திவெளியிடுதல், திரையரங்குகளில் விழிப்புணர்வு படம் ஒளிபரப்புதல்,குப்பை அகற்றும் வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள ஒலிபெருக்கி மற்றும் பண்பலை அலைவரிசை ஆகியவை மூலம் சொத்துவரி செலுத்தக் கோரி விழிப்புணர்வு செய்தல், ரூ.50 ஆயிரத்துக்கு குறைவான சொத்துவரி நிலுவைவைத்துள்ள உரிமையாளர்களுக்கு அஞ்சல் துறை மூலம்அறிவிப்புகள் சார்வு செய்தல் என பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி மேற்கொண்டு இருந்தது.

சென்னை மாநகராட்சியில் நேற்றுடன் நிறைவடைந்த 2022-23 நிதியாண்டில், நேற்று இரவு 9 மணி வரை சொத்து வரியாக ரூ.1521 கோடி, தொழில் வரியாக ரூ.518 கோடி என மொத்தம் ரூ.2 ஆயிரத்து 39 கோடி வசூலாகியுள்ளது. இரவு 12 மணி வரை வரி வசூல் நடைபெற்றது. இது நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட ரூ.39 கோடி அதிகமாகும்.

SCROLL FOR NEXT