சென்னை: கலாஷேத்ரா அறக்கட்டளை விவகாரத்தில் குற்றச்சாட்டு உறுதியானால், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதியளித்தார்.
சட்டப்பேரவையில் நேற்று நேரமில்லா நேரத்தில் கலாஷேத்ரா கல்லூரி மாணவிகள் போராட்டம் தொடர்பாக உறுப்பினர்கள் கு.செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்), அருள் (பாமக), எஸ்.எஸ்.பாலாஜி (விசிக), டி.ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்), தி.வேல் முருகன்(தவாக) ஆகியோர் சிறப்பு கவனஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்து பேசினர். இதுகுறித்து விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். இதற்கு பதில் அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
மத்திய அரசின் கலாச்சாரத் துறையின்கீழ் செயல்பட்டு வரும் கலாஷேத்ரா அறக் கட்டளை விவகாரத்தை பொறுத்தவரை, தேசிய மகளிர் ஆணையம் தானாக முன்வந்து ‘பாலியல் தொல்லை’ என ட்விட்டர் பதிவு போட்டு, மார்ச் 21-ம் தேதி நடவடிக்கை எடுக்குமாறு டிஜிபிக்கு கடிதம் எழுதியது.
இது தொடர்பாக கலாஷேத்ரா அறக்கட்டளை இயக்குநர், டிஜிபியை சந்தித்து, தங்கள் நிறுவனத்தில் பாலியல்புகார் ஏதுமில்லை என்று தெரிவித்தார்.பின்னர், தேசிய மகளிர் ஆணையமே, விசாரணையை முடித்து வைத்துவிட்டோம் என்று டிஜிபிக்கு மார்ச் 25-ல் கடிதம் எழுதியது.
மார்ச் 29-ல் தேசிய மகளிர் ஆணைய தலைவரே கலாஷேத்ரா வந்து, 210 மாணவிகளிடம் விசாரித்து சென்றுள்ளார். அப்போது, காவல்துறை இங்கு வரத் தேவையில்லை என்றும் அவர் கூறியிருக்கிறார். இந்த விவகாரத்தில் காவல் துறைக்கு இதுவரை எழுத் துப்பூர்வமான புகார் ஏதும் வரவில்லை.
இந்த விவகாரம் என் கவனத்துக்கு கொண்டு வரப்பட்ட வுடன், மாவட்ட ஆட்சித்தலைவருடன் தொடர்புகொண்டு, விவரங்களை கேட்டறிந்தேன். அதிகாரிகள் அடங்கிய குழுவினர் சென்று, மாணவிகள் மற்றும் நிர்வாகத்தினருடன் பேசி வருகின்றனர். அங்குள்ள மாணவிகளின்பாதுகாப்புக்குத் தேவையான நடவடிக்கைககள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
விசாரணையில் குற்றச்சாட்டு உறுதியானால், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர் கள் மீது சட்டரீதியான நட வடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.
போராட்டம் வாபஸ்: இதனிடையே, மாநில மகளிர் ஆணைய தலைவி குமாரி, கலாஷேத்ரா கல்லூரிக்கு நேற்று சென்று விசாரணை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, ‘‘பாலியல் தொல்லைதொடர்பாக மாணவிகள் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தனர்.
இதுபோன்ற புகாரை பழைய மாணவிகளும் கொடுத்துள்ளனர். 12 மாணவிகளிடம் 5 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. அவர்கள் 4 பேர் மீது புகார் தெரிவித்துள்ளனர். அவர்களிடமும் விசாரணை நடத்துவோம். போராட்டத்தை கைவிடுவதாக மாணவிகள் என்னிடம் தெரிவித்தனர். இது தொடர்பான விசாரணை அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்படும்’’ என்றார்.
இந்நிலையில், 2015 முதல் 2019-ம் ஆண்டு வரை கலாஷேத்ரா கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவி ஒருவர், பாலியல் தொல்லை குறித்து அடையாறு மகளிர்காவல் நிலையத்தில் நேற்று மாலை எழுத்துப்பூர்வமாக புகார் ஒன்றை அளித்துள்ளார். இதுகுறித்து போலீஸார் முதல்கட்ட விசாரணையை தொடங்கி உள்ளனர்.