தமிழகம்

கிராமப் பகுதிகளில் ரூ.1,000 கோடியில் 10 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு: அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவிப்பு

செய்திப்பிரிவு

சென்னை: கிராமப் பகுதிகளில் ரூ.1,000 கோடியில் 10 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்படும். அனைத்து அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு சுற்றுச்சுவர் கட்டித் தரப்படும் என்று பேரவையில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவித்தார்.

தமிழகசட்டப்பேரவையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. இதில், உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தும், அறிவிப்புகளை வெளியிட்டும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பேசியதாவது:

விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த அவர்கள் வாழும் குடியிருப்புகளில், முக்கியமான உட்கட்டமைப்பு வசதிகளான சாலைகள், கால்வாய்கள், தெரு விளக்குகள், குடிநீர் வசதிகள் போன்ற பல்வேறு திட்டங்களை ஒருங்கிணைத்து ரூ.1,500 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

ஒரு லட்சம் கிராமப்புற ஏழை மக்களின் வாழ்வாதாரம் மேம்பட அவர்களுக்கு நிலைத்த வருமானத்தை வழங்கும் வகையில் ரூ.1,000 கோடியில் தனிநபர் மற்றும் சமுதாய சொத்துகள் உருவாக்கப்படும். ஊரகப் பகுதிகளில் ரூ.1,000 கோடியில் 10 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்படும்.

புவி வெப்பமடைவதை தடுக்கவும், ஊரகப் பகுதிகளின் பசு மையை அதிகரிக்கவும் ரூ.275 கோடியில் 70 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும். ஊரகப் பகுதிகளில் பெண்கள் மற்றும் வளரிளம் பெண்களின் ரத்தசோகையை குறைக்கும் வகையில் 21 லட்சம் முருங்கை கன்றுகள் ரூ.137 கோடியில் மகளிர் சுய உதவிக் குழுக்களால் வளர்க்கப்படும். பின்னர் 10 லட்சத்து 50 ஆயிரம் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு அவை வழங்கப்படும்.

கிராமங்களில் பணிபுரியும் 66,130 தூய்மைக் காவலர்களின் மாதாந்திர மதிப்பூதியம் ரூ.3,600-ல் இருந்து ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். நகர்ப்புறத்தை ஒட்டியுள்ள ஊராட்சிகளுக்கான அடிப்படை கட்டமைப்பு மற்றும் கழிவு மேலாண்மை வசதிகளை அருகில் உள்ள நகர்ப்புறங்களுடன் ஒருங்கிணைத்து செயல்படுத்த ரூ.69 கோடியில் சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.

மலைப்பகுதிகளில் உள்ள ஊராட்சிகளின் அடிப்படை தேவைகளை மேம்படுத்த ரூ.30 கோடியில் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். ஊரகப் பகுதிகளில் 500 புதிய அங்கன்வாடி மையங்கள் ரூ.70 கோடியில் கட்டப்படும்.

முதல்வரின் காலை சிற்றுண்டி திட்டத்தை செயல்படுத்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் 2,043 புதிய சத்துணவு கூடங்கள் ரூ.154 கோடியில் கட்டப்படும். சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் மாசைக் குறைக்கும் வகையில் 1,500 கி.மீ. நீளமுள்ள ஊரகச் சாலைகள் அமைக்க 500 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் கழிவுகள் பயன்படுத்தப்படும். இவ்வாறு அமைச்சர் அறிவித்தார்.

100 நாள் வேலை சம்பளம் உயர்வு: முன்னதாக அமைச்சர் பெரியசாமி பதிலுரையாற்றும்போது, “அனைத்து அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் சுற்றுச்சுவர் கட்டித் தரப்படும். கிராம சாலை திட்டத்தின் கீழ் ரூ.4 ஆயிரம் கோடியில் 10 ஆயிரம் கி.மீ.க்கு சாலைகள் உருவாக்கப்படும்.

இதன்மூலம் 12,255 ஊராட்சிகளில் உள்ள 79 ஆயிரம்குக் கிராமங்கள் இணைக்கப்படும். 100 நாள் வேலைதிட்டத்தில் பணிபுரிவோருக்கு ஏப்.2 முதல் சம்பளம் ரூ.294 வழங்கப்படும். வேலைநாட்களை 150 நாட்களாக உயர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித் தார்.

SCROLL FOR NEXT