கிருஷ்ணகிரி: வேப்பனப்பள்ளி அருகே கடந்த 20 ஆண்டாக ரேஷன் பொருட்கள் வாங்கக் கிராம மக்கள் ஆபத்தான முறையில் ஆற்றை கடந்து 2 கிமீ தூரம் நடை பயணமாக செல்லும் நிலையில், தங்கள் கிராமத்தில் பகுதி நேர ரேஷன் கடை திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியம் சிகரமாகனபள்ளி ஊராட்சிக்கு உட்பட்டது தோட்டக் கணவாய் கிராமம். இங்கு 180-க்கும் மேற்பட்ட குடியிருப்பு களில் 700-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இக்கிராம மக்கள் ரேஷன் பொருட்களை வாங்க 2 கிமீ தூரத்தில் உள்ள சிகரமாகனபள்ளி கிராமத்தில் உள்ள ரேஷன் கடைக்கு ஒத்தையடிப் பாதை வழியாக, திம்மம்மா ஆற்றைக் கடந்து செல்ல வேண்டும்.
20 ஆண்டுகளாக அவலம்: குறிப்பாக மழைக் காலங்களில் ஆற்றில் அதிகளவில் தண்ணீர் செல்லும்போது இந்த வழியாக மக்கள் ரேஷன் கடைக்கு வந்து செல்ல முடியாது.
அப்போது, 8 கிமீ தூரம் சுற்றி வர வேண்டும். இந்நிலையில், தோட்டக்கணவாய் கிராமத்தில் ரேஷன் கடை அமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக கிராம மக்கள் கூறியதாவது:
விவசாயத்தை வாழ்வாதார மாகக் கொண்டு நாங்கள் வாழ்ந்து வருகிறோம். கடந்த 20 ஆண்டுகளாக நாங்கள் ரேஷன் பொருட்கள் வாங்க பல்வேறு சிரமங்களுக்கு இடையில் சிகரமாகனபள்ளிக்கு சென்று வருகிறோம்.
ரேஷன் பொருட்களை வாங்கிய பின்னர் தலைச்சுமையாக ஆற்றைக் கடந்து ஊருக்கு வருவதில் சிரமம் ஏற்படுகிறது.
முதியவர்கள் சிரமம்: பலநேரங்களில் முதியவர்கள், பெண்கள் ரேஷன் பொருட்களை ஆற்றில் தவறவிடுவதும் உண்டு. சிலர் ரேஷன் அட்டையைத் தொலைத்தும் உள்ளனர்.
ஆற்றில் தண்ணீர் அதிகம் வரும்போது, வேப்பனப்பள்ளி வழியாக 8 கிமீ தூரம் சுற்றி ஆட்டோ அல்லது இருசக்கர வாகனங்களில் சென்று பொருட்களை வாங்கும் நிலையுள்ளது. எனவே, எங்கள் கிராமத்தில் பகுதி நேர ரேஷன் கடை திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.