தமிழகம்

அம்பத்தூர் பண்ணையிலிருந்து பால் விநியோகம் தாமதமானதால் மக்கள் பாதிப்பு: ஆவின் நிறுவன உதவி பொதுமேலாளர் சஸ்பெண்ட்

செய்திப்பிரிவு

சென்னை: அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் பால் விநியோகம் செய்வதில் தாமதம்ஏற்பட்டதால், பல்வேறு இடங்களில் பால்கிடைக்காமல் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகினர். இதையடுத்து, ஆவின் உதவிப் பொது மேலாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

சென்னையில் ஆவின் நிறுவனம் மூலம்தினமும் 14.50 லட்சம் லிட்டர் பால் விநியோகம் செய்யப்படுகிறது. இதில், அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் இருந்து மட்டும் தினமும் 4.20 லட்சம் லிட்டர் பதப்படுத்தப்பட்டு, விநியோகிக்கப்படுகிறது. மாதாந்திர அட்டைதாரர்கள், முகவர்கள் உள்ளிட்ட பலருக்கு இங்கிருந்து பால் விநியோகம் செய்யப்படுகிறது.

இந்நிலையில், அம்பத்தூர் பால்பண்ணையிலிருந்து பால் விநியோகம் செய்வதில் கடந்த சில நாட்களாக தாமதம்ஏற்பட்டு வந்தது. இதற்கு் இயந்திர பழுது,வெளி மாவட்டத்தில் இருந்து பால் வரத்துகுறைவு போன்ற காரணங்கள் கூறப்பட்டன.

இந்நிலையில், நேற்று காலையிலும் அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் இருந்து பால் விநியோகம் செய்வதில்தாமதம் ஏற்பட்டது. மாதாந்திர அட்டைதாரர்கள், மொத்த விநியோகஸ்தர்கள் ஆகியோருக்கு வழங்குவதற்காக, பால் பண்ணையில் இருந்து அதிகாலை 3மணிக்கு முன்பாகவே பால் வாகனங்கள் வெளியேறிவிடும். ஆனால் நேற்று காலை6.30 மணிவரை பால் பண்ணையில் இருந்து வாகனங்கள் வெளியேறவில்லை.

இதனால், அண்ணா நகர், முகப்பேர், மதுரவாயல், நெற்குன்றம், கோயம்பேடு, வடபழனி, திருவேற்காடு, பூந்தமல்லி, போரூர், மாங்காடு, வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பால் விநியோகம் முடங்கியது. பல பகுதிகளுக்கு பால் மிகத்தாமதமாகச் சென்றதால், ஆவின் பால் கிடைக்காமல் மக்கள் சிரமப்பட்டனர்.

இதையடுத்து, பால் விநியோகம் செய்வதில் ஏற்பட்ட தாமதத்துக்காக, ஆவின் பால்பண்ணையில் இயந்திரப் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் உதவிப் பொது மேலாளர் (பொறியியல்) தற்காலிகபணிநீக்கம் செய்யப்பட்டார். அதேபோல,தர உறுதிப் பணிகளை மேற்கொள்ளும் உதவிப் பொதுமேலாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதுகுறித்து ஆவின் நிறுவன மேலாண்இயக்குநர் ந.சுப்பையன் கூறியதாவது: அம்பத்தூர் பால் பண்ணையில் 3 இயந்திரங்கள் உள்ளன. இவற்றைப் பயன்படுத்தி பால் உற்பத்தி செய்யப்படுகிறது. எதிர்பாராத விதமாக 2 இயந்திரங்களில் புதன்கிழமை இரவு பழுது ஏற்பட்டது. இதனால் பாலைப் பதப்படுத்தி, விநியோகம் செய்வதில் தாமதம் ஏற்பட்டது. இதுதொடர்பாக இருவர் மீது துறை ரீதியாகநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருவரிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.

தற்போது பழுதடைந்த 2 இயந்திரங்களும் சரிசெய்யப்பட்டு விட்டன. மார்ச் 31-ம்தேதி (இன்று) காலைமுதல் வழக்கம்போல பால் விநியோகம் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT