சென்னை: நடிகர் சிம்புவின் `பத்து தல' திரைப்படத்தைக் காண நரிக்குறவர்கள், அவர்களது குடும்பத்தினர் 15 பேர் கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்குக்கு நேற்று காலை சென்றனர். அப்போது அவர்களைத் தடுத்து நிறுத்திய திரையரங்க ஊழியர், உள்ளே செல்ல அனுமதி மறுத்துள்ளார். அங்கிருந்தவர்கள் இதைக் கண்டித்த பிறகு, நரிக்குறவர் சமுதாயத்தினர் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகியது.
இது தொடர்பாக கோயம்பேடு காவல் ஆய்வாளர் விசாரித்தார். அப்போது திரையரங்க நிர்வாகம் தரப்பில், "பத்து தல படத்துக்கு யுஏ சான்றிதழ் அளிக்கப்பட்டிருப்பதால், குழந்தைகளுடன் வந்த அந்தக் குடும்பத்தினரை திரையரங்க ஊழியர் அனுமதிக்கவில்லை. பின்னர், அவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது" என்று விளக்கம் அளித்துள்ளனர். இந்நிலையில், சினிமா பார்க்க வந்தவர்களைத் தடுத்து நிறுத்திய ஊழியர் மீது, கோயம்பேடு போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.