தமிழகம்

நாங்கள் 50 ஆண்டுகள் சாதிக்காததை அரை டம்ளர் சாராயம் சாதிக்கிறது: கி.வீரமணி வேதனை

செய்திப்பிரிவு

நாகப்பட்டினம்/ காரைக்கால்: நாங்கள் 50 ஆண்டுகளாக சாதிக்காததை அரை டம்ளர் சாராயம் சாதிக்கிறது என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வேதனை தெரிவித்தார்.

நாகை மாவட்டம் திருமருகல் சந்தைப்பேட்டையில் தி.க சார்பில் சமூக நீதி பாதுகாப்பு திராவிட மாடல் விளக்க பரப்புரை தொடர் பயண பொதுக்கூட்டம் மாவட்டத் தலைவர் வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன் தலைமையில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் ஜெ.புபேஸ் குப்தா வரவேற்றார்.

கூட்டத்தில், தி.க தலைவர் கி.வீரமணி பேசியதாவது: கிராமப்புறங்களில் உள்ள பெரும்பாலான டீ கடைகளில் இரட்டைக் குவளை முறை நடைமுறையில் இருந்தது. நாங்களும், கம்யூனிஸ்ட் கட்சியினரும் தொடர்ந்து போராடி அகற்றினோம். அதற்கு சற்றுத் தள்ளி போய் பார்த்தால், டாஸ்மாக் மதுபானக் கடை இருக்கும்.

ஆனால், அங்கு ஒற்றைக் குவளை தான். கொஞ்சம் சாராயம்(மது) உள்ளே போனதும் அருகில் இருப்பவரை பார்த்து ‘பிரதர்’ என்று தான் சொல்கிறான். அதுவும் ஆங்கிலத்தில். அப்போது சாதி எங்கே போனது. நாங்கள் 50 ஆண்டுகளாக சாதிக்காததை அரை டம்ளர் சாராயம் சாதிக்கிறது. இதற்கு வெட்கப்பட வேண்டாமா?

பெண்கள் உயர்கல்வி பயில மாதம் ரூ.1,000 தமிழக அரசு வழங்குகிறது. அடுத்து குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்பட உள்ளது. திராவிட மாடல் சாதனைக் களத்தில், சமுதாய புரட்சிதான் தலையாய புரட்சி. அந்த சமுதாய புரட்சியை செய்ய நாம் ஆயத்தமாக இருக்க வேண்டும்.

மக்களவைத் தேர்தலில் சனாதனவாதிகள், சாதி வெறியர்கள், மத வெறியர்கள் ஆட்சிக்கு வராமல் இருக்க நாம் தயாராக வேண்டும். சமத்துவத்தை ஏற்படுத்த கூடிய ஒரு ஆட்சியாக இந்த ஆட்சி நீடித்தால்தான் நமக்கு விடியல் கிடைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக காரைக்காலில் நேற்று முன்தினம் இரவு அவர் செய்தியாளர்களிடம் கூறியது: இந்தி மொழியை திணிக்க மாட்டோம் என்று ஒரு பக்கம் சொல்லிக் கொண்டே, தயிர் பாக்கெட்டுகளில் இந்தி வார்த்தையை அச்சிட வேண்டும் என உத்தரவிடுகின்றனர். இது மிகவும் கண்டனத்துக்குரியது. எவ்வளவு வேகமாக அவர்கள் இந்தியை திணிக்கிறார்களோ, அவ்வளவு வேகமாக அவர்கள் ஆட்சிக்கு குழி தோண்டிக் கொள்கிறார்கள் என்று பொருள் என்றார்.

SCROLL FOR NEXT