திருவண்ணாமலை: குப்பநத்தம் அணையில் காவல் துறையினர் பாதுகாப்புடன் உள்நாட்டு மீனவ மகளிர் கூட்டுறவு சங்கத்தினர் மீன் பிடிக்கும் பணியை நேற்று மீண்டும் தொடங்கினர்.
தி.மலை மாவட்டம் செங்கம் அடுத்த குப்பநத்தம் அணையில், சாத்தனூர் அணை பங்கு உள்நாட்டு மீனவ மகளிர் கூட்டுறவு சங்கத்தினர் கடந்த 2017 முதல் 2022-ம் ஆண்டு வரை மீன் பிடிக்கும் உரிமையை பெற்றிருந்தனர்.
கரோனா ஊரடங்கு காரணமாக, மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டதால், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது எனக் கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, மேலும் 2 ஆண்டுக்கு மீன் பிடிக்கும் உரிமை கால நீட்டிப்பு பெற்றனர். இதற்காக, மீன் வளத்துறைக்கு சுமார் ரூ.8 லட்சம் செலுத்தி உள்ளனர்.
இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குப்பநத்தம் அணையில் அமைக்கப்பட்டிருந்த கீற்று கொட்டகை கடந்த 10 நாட்களுக்கு முன்பு தீ வைத்து எரிக்கப்பட்டது. மீன் பிடிப்பு உபகரணங்கள், தண்ணீரில் வீசப்பட்டன.
மீன் பிடிக்கும் உரிமையை கேட்டு சாலை மறியலில் மலை கிராம மக்கள் ஈடுபட்டனர். அப்போது, கோட்டாட்சியர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணுமாறு காவல் துறையினர் கேட்டு கொண்டதால், சாலை மறியல் முடிவுக்கு வந்தது.
இந்நிலையில், திருவண்ணா மலை கோட்டாட்சியர் அலுவலகத்தில் 2 முறை பேச்சுவார்த்தை நடைபெற்றது. கோட்டாட்சியர் மந்தாகினி தலைமையில் கடந்த 27-ம் தேதி நடைபெற்ற பேச்சுவார்த்தையில், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவது, மீன் பிடிக்கும் பணியை 30-ம் தேதி தொடங்கலாம், அப்போது காவல் துறையினர் பாதுகாப்பு வழங்குவது என முடிவு செய்யப்பட்டன.
இதையடுத்து குப்பநத்தம் அணையில், சாத்தனூர் அணை பங்கு உள்நாட்டு மீனவ மகளிர் கூட்டுறவு சங்கத்தினர், காவல் துறையினர் பாதுகாப்புடன் மீன் பிடிக்கும் பணியை நேற்று தொடங்கினர்.
கீற்று கொட்டகை கடந்த 10 நாட்களுக்கு முன்பு தீ வைத்து எரிக்கப்பட்டது. மீன் பிடிப்பு உபகரணங்கள், தண்ணீரில் வீசப்பட்டன.