கோவை/ சென்னை: சென்னை - கோவை இடையே ‘வந்தே பாரத்' ரயில் சோதனை ஓட்டம் நேற்று வெற்றிகரமாக நடந்தது. ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி ஏப்.8-ம் தேதி தொடங்கி வைக்க உள்ளதாக சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் பங்கஜ்குமார் சின்ஹா தெரிவித்தார்.
சென்னை ஐசிஎஃப்-ல் தயாரிக்கப்படும் வந்தே பாரத் ரயில்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்து வருகிறது. நாட்டின் பல நகரங்களுக்கு இடையே 10 வந்தே பாரத் ரயில்கள் தற்போது வரை இயக்கப்படுகின்றன.
11-வது வந்தே பாரத் ரயிலை புதுடெல்லி - மத்திய பிரதேச மாநிலம் போபால் ராணி கம்லாபத் நிலையம் இடையே ஏப்.1-ம் தேதி இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. 12-வது வந்தே பாரத் ரயிலை சென்னை - கோவை இடையே இயக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, நேற்று சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து நேற்று காலை 5.40 மணிக்கு புறப்பட்ட ரயில், ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக காலை 11.18 மணிக்கு கோவை வந்தடைந்தது. மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் 8 பெட்டிகளுடன் ரயில் இயக்கப்பட்டது.
பின்னர், கோவையில் இருந்து நண்பகல் 12.40 மணிக்கு புறப்பட்டு, மாலை 6.40 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடைந்தது. இந்த ரயிலில் சென்னை மற்றும் சேலம் கோட்ட இயக்கக பிரிவு, மின்னணு பிரிவு அதிகாரிகள் உள்ளிட்டோர் பயணித்தனர்.
சோதனை ஓட்டம் குறித்து சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் பங்கஜ் குமார் சின்ஹா கோயில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 5 மணி 38 நிமிடங்களில்.. சென்னையில் இருந்து கோவை வரும் ‘வந்தே பாரத்' ரயிலின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்துள்ளது. எவ்வளவு மணி நேரத்தில் ரயிலை இயக்க முடியும் என சோதிக்கப்பட்டது.
சென்னையில் இருந்து 5 மணி நேரம் 38 நிமிடங்களில் இந்த ரயில் கோவை வந்து சேர்ந்தது. ரயில்வே அட்டவணையில் இந்த ரயில் கோவை வந்து சேர 6 மணி நேரம் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்துக்கு உள்ளேயே இயக்கப்படும் முதல் ‘வந்தே பாரத்' ரயில் இது. இந்த ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி ஏப்.8-ம் தேதி தொடங்கி வைக்க உள்ளார். இந்த ரயில் 8 பெட்டிகளுடன் இயக்கப்படும்.
மொத்தம் 536 இருக்கைகள் இருக்கும். வரவேற்பை பொருத்து, பெட்டிகள் எண்ணிக்கை 16 ஆக அதிகரிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்