சென்னை: வைக்கம் போராட்டம் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மார்ச் 30-ம் தேதி தொடங்கி ஓராண்டு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். பிற மாநிலங்களில் ஒடுக்கப்பட்டோர் நலனுக்காக பாடுபட்டு, குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் ஆளுமைகள் அல்லது நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் ‘வைக்கம் விருது’ வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
வைக்கம் போராட்டம் நூற்றாண்டு விழா குறித்து, சட்டப்பேரவையில் 110 விதியின்கீழ் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: கேரளாவின் கோட்டயம் மாவட்டம் வைக்கத்தில் உள்ள மகாதேவர் கோயிலை சுற்றி அமைந்துள்ள தெருக்களில், ஒடுக்கப்பட்டவர்கள் நடப்பதற்கு இருந்த தடைகளை நீக்கக் கோரி நடந்ததுதான் வைக்கம் போராட்டம். 1924 மார்ச் 30-ம் தேதி கேரள தலைவர் டி.கே.மாதவனால் தொடங்கப்பட்டது.
கேரளத் தலைவர்கள் அழைப்பின்பேரில், தமிழக காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்த பெரியார், வைக்கம் சென்று, அந்த போராட்டத்துக்கு தலைமை ஏற்றார். போராட்டம் 1925 நவ.23-ம் தேதி முடிவுக்கு வந்தது. அம்மாதம் 29-ம் தேதி வைக்கத்தில் நடந்த வெற்றி விழாவில், ‘வைக்கம் வீரர்’ என்று பெரியாரை பாராட்டினர்.
கோயில் தெருவில் அனைவரும் நடக்கலாம் என்ற உரிமையை பெற்றுத்தந்த இந்த போராட்டம் நடந்து 100 ஆண்டுகள் ஆகின்றன. மக்களுக்காக எல்லைகளைக் கடந்து போராடி, வெற்றி கண்ட பெரியாரின் நினைவைப் போற்றும் வகையில், ‘வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழா’ நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
வைக்கம் போராட்டம் தொடங்கிய மார்ச் 30-ம் தேதி நூற்றாண்டு விழாவை தொடங்கி ஓராண்டு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மமக, கொமதேக, தவாக என அனைத்து கட்சிகளும் வரவேற்றன. பாஜக சட்டப்பேரவை கட்சித் தலைவர் நயினார் நாகேந்திரன் பேசும் போது, ‘‘முதல்வரின் அறிவிப்பை வரவேற்கிறேன். அதேநேரம் இன்று ராமநவமி. ராமர் பிறந்த தினம் என்பதையும் பதிவு செய்கிறேன்’’ என்றார்.