தமிழகம்

புதுச்சேரியில் வாஜ்பாய், கருணாநிதி, ஜெயலலிதாவுக்கு அரசு விழா: முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: “மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய், மறைந்த முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு அரசு விழாவை புதுச்சேரி அரசு நடத்தும். அரசு ஊதியம் பெற்று கடந்த ஆட்சியில் நீக்கப்பட்டோருக்கு மீண்டும் வேலை தரப்படும்” என்று அம்மாநில முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

இது குறித்து புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி சட்டப்பேரவையில் பேசியது: "மத்திய அரசு உதவியோடும் உறுதுணையோடும் அதிக நிதி பெற்று சிறந்த முறையில் செலவிட்டு புதுச்சேரியை முன்னேற்றுவோம். பட்ஜெட் கூட்டத்தொடரில் எம்எல்ஏக்கள் கேள்விகளுக்கு நிறைவான பதில்களை அமைச்சர்கள் தந்துள்ளனர்.

புதுச்சேரியை பொறுத்தவரை நிர்வாக சீர்திருத்தத்தை கொண்டு வர வேண்டும். அதைக் கொண்டு வந்தால்தான் விரைவாக அரசு எண்ணங்களை செயல் வடிவில் கொண்டு வரமுடியும். பிரச்சினைகளை தீர்க்க நிர்வாகச் திருத்தத்தில் அரசு கவனம் செலுத்தும். பேரவையில் இம்முறை தலைமைச் செயலர், செயலர்கள் பற்றி அதிகளவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதை போக்கும் அளவில் அரசானது சீர்திருத்தம் செய்யப்படும். நிறைய சிக்கல்கள் உண்டாக்கும் வகையில் எளிமையாக செய்ய முடியாத வகையில் உள்ளது. புதிய சட்டப்பேரவை கட்டவேண்டும் என்ற எண்ணம் உள்ளது. அதற்கு விரைவில் முடிவு எடுக்கப்படும்.

புதிய சட்டப் பேரவைக்கு வரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. எங்கு என்பது விரைவில் முடிவு எடுக்கப்படும். இந்த ஆண்டுக்குள் புதிய சட்டப்பேரவை கட்ட முடிவு எடுக்கப்பட்டு பூமி பூஜை போடப்படும். அரசானது காலி பணியிடங்களை நிரப்புவதே எண்ணம்.

பத்தாயிரம் பணியிடங்கள் காலியாக இருந்தது. ஒவ்வொரு துறைவாரியாக நிரப்புகிறோம். விரைவில் காலி பணியிடங்கள் நிரப்பப்படும். கடந்த ஆட்சி காலத்தில் பணியில் அமர்த்தப்பட்டு, அரசு சம்பளம் வாங்கி கடந்த ஆட்சியில் நீக்கப்பட்டிருந்தால் திரும்பவும் வேலை தர வேண்டும் என்பதில் மாறுபட்ட கருத்தில்லை. ஆட்சி மாறலாம் பணி மாறாது. குறிப்பாக கேவிகே-வில் 150 பேர் நீக்கப்பட்டுள்ளனர். மீண்டும் பணியில் அமர்த்தப்படுவார்கள். பொதுப் பணித் துறையில் சம்பளம் பெற்றிருந்து நீக்கப்பட்டிருந்தால் அவர்களும் பணியில் அமர்த்தப்படுவார்கள்.

பொதுவாக பணியில் இருந்து இறந்த வாரிசு தாரரர்களுக்கு பணி தரப்படும். சட்டப்பேரவையில் பணிக்கு சேர்ந்தோர் தொடர்ச்சியாக பணிக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். சிறந்த மருத்துவ வசதி கிடைக்க வேண்டும். அதற்கு நடவடிக்கை எடுக்கிறோம். அரசு பொது மருத்துவமனை கொண்டு வர நடவடிக்கை எடுக்கிறோம்.

பத்திரிகையாளர்கள் ஓய்வூதியம் ரூ.10 ஆயிரமாகும். மனைப் பட்டா தர நடவடிக்கை எடுப்போம். மறைந்த தலைவர்களுக்கும், நம் நாட்டுக்கு, மொழிக்கு, பாடுபட்டோருக்கு சிலை வைக்க அரசு விழா எடுக்க உள்ளோம். அதன்படி, மறைந்த பிரதமர் வாஜ்பாய், முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா, புதுச்சேரியின் வளர்ச்சிக்கு பாடுபட்ட செல்லா நாயக்கர், தியாகு முதலியார் ஆகியோருக்கு அரசு விழா எடுக்கப்படும்.

துறை சார்ந்த பணிகள் விரைவில் முடிக்கப்படும். எல்டிசி, யூடிசி தேர்வு ஏப்ரலில் நடத்தப்படும். அரசு ஊழியர்கள், செயலர்கள் ஒத்துழைப்பு இருந்தால்தான் செயல்படுத்த முடியும்” என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT