சென்னை: ஐஐடி, ஐஐஎம் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேரும் கட்டுமானத் தொழிலாளர் வாரிய உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் கல்வி உதவித் தொகையாக வழங்கப்படும் எனச் சட்டப்பேரவையில் தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் அறிவித்தார்.
சட்டப்பேரவையில் நேற்று தொழிலாளர் நலன் மற்றும் திறன்மேம்பாட்டுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் உறுப்பினர்களின் கேள்விக்கு அத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் அளித்த பதில்:
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்களில் புதிதாக 12 லட்சத்து66 ஆயிரத்து 126 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். 9 லட்சத்து 56 ஆயிரம் தொழிலாளர்களுக்கு ரூ.725 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் வெளிமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியுடனும் பணியாற்றி வருகிறார்கள்.
புதிதாக 12 அரசு ஐடிஐ-க்கள்தொடங்கப்பட்டுள்ளன. ஐடிஐ மாணவர்களுக்கு வளாக நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு அதன்மூலம் 76 சதவீதம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. தற்போதைய வேலைவாய்ப்பு சூழலைக் கருத்தில்கொண்டு அரசு ஐடிஐ-க்களில்4.0 தரத்தில் புதிய தொழிற்படிப்புகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இப்படிப்புகள் ஜூன் மாதத்துக்குள் தொடங்கப்படும்.
வேலைவாய்ப்பு பயிற்சித் துறைமூலம் 94 தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு அதன்மூலம் ஒரு லட்சத்து 42 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெற்றனர். இவ்வாறு அமைச்சர் கணேசன் கூறினார்.
பின்னர் அவர் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் வருமாறு:
நலத்திட்டங்கள்: அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியங்களில் பதிவுபெற்ற தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மூக்குக் கண்ணாடி உதவித்தொகை ரூ.500-லிருந்து ரூ.750 ஆக உயர்த்தப்படும்.
அமைப்புசாரா தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குழந்தைகள் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க ரூ.25 ஆயிரமும், சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்க ரூ.50 ஆயிரமும்ஊக்கத்தொகையாக வழங்கப் படும்.
கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவுசெய்துள்ள தொழிலாளர்களின் பிள்ளைகள் ஐஐடி, ஐஐஎம் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கை பெறும்போது கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் மற்றும் வாழ்க்கைச் செலவுக்காக ஒவ்வோர் ஆண்டும் ரூ.50ஆயிரம் கல்வி உதவித் தொகை யாக வழங்கப்படும்.
பட்டாசு, தீப்பெட்டி தொழிலாளர் நல வாரியத்தில் பதிவுபெற்ற தொழிலாளர்கள் விபத்தில் மரணம் அடையும்போது வழங்கப்படும் உதவித் தொகை ரூ.1.25 லட்சத்திலிருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தி வழங்கப் படும்.
கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவுபெற்ற 60 வயதுக்கு உட்பட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மற்றும் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வகையில் தீவிர நோய் பாதிப்பு நலத்திட்ட உதவித் தொகையாக ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் வழங்கும் திட்டம் முதல்கட்டமாக 3 ஆண்டுகளுக்கு அறிமுகப்படுத்தப்படும்.
அமைப்புசாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுதுபார்க்கும் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவுபெற்ற தொழிலாளர்கள் பணியின்போது விபத்து மரணம் அடைய நேரிட்டால் உதவித் தொகையாக ரூ.5 லட்சம் வழங்கப்படும்.
ஆண்டுதோறும் கட்டுமான தொழிலாளர் நல வாரிய தொழிலாளர்கள் 1,000 பேருக்கு ரூ.4 கோடியே 74 லட்சம் செலவில் தமிழ்நாடு கட்டுமான கழகம் மூலம் திறன் பயிற்சி அளிக்கப்படும்.
சென்னை அயனாவரம் இஎஸ்ஐமருத்துவமனையில் மயக்க மருந்தியல், காது, மூக்கு, தொண்டை மருத்துவம் மற்றும் குழந்தை மருத்துவம் ஆகிய பிரிவுகளில் எம்பிபிஎஸ் படிப்புக்குப் பிறகான 2 ஆண்டு டிப்ளமோ படிப்பு தொடங்கப்படும். மேற்கண்ட அறிவிப்புகளை அமைச்சர் வெளியிட்டார்.