தமிழகம்

ஆவின் தயிர் பாக்கெட்டில் ‘தஹி’ என்ற இந்தி வார்த்தை பயன்படுத்தபடாது: தமிழக அரசு திட்டவட்டம்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் ஆவின் நிறுவன தயிர் பாக்கெட்டில் ‘தஹி’என்ற இந்தி வார்த்தையை பயன்படுத்த வேண்டும் என்று இந்திய உணவுபாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளநிலையில், ஆவின் தயிர் பாக்கெட்களில் ‘தஹி’என்ற இந்தி வார்த்தை பயன்படுத்தப்படாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், தமிழகத்தில் ஆவின் நிறுவனம், கர்நாடகாவின் நந்தினி பால்பொருட்களின் தயிர் பாக்கெட்டில் ‘தஹி’என்ற இந்தி வார்த்தையை பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

ஆவின் தயிர் பாக்கெட்டில் தயிர் என்ற வார்த்தையும், curdஎன்ற ஆங்கில வார்த்தையும் பயன்படுத்தப்படுகிறது. இதில், ஆங்கிலவார்த்தையை நீக்கி விட்டு ‘தஹி’ என்ற இந்தி வார்த்தையை ஆகஸ்ட் 1 முதல் பயன்படுத்த வேண்டும் என்று ஆணையம் கட்டாயமாக தெரிவித்துள்ளது.

இதுபோல, கன்னடத்தில் மோசரு என்ற வார்த்தைக்கு பதிலாக ‘தஹி’ என்று வார்த்தையை பயன்படுத்த வேண்டும். வேண்டும் என்றால் அடைப்புக்குறியில் கன்னட வார்த்தையை பயன்படுத்தலாம் என்று ஆணையம் தெரிவித்துள்ளது. இதற்கு கடும் எதிர்ப்புகிளம்பியுள்ளது. பாமக நிறுவனத்தலைவர் ராமதாஸ், தமிழக பால் முகவர்கள் நலச் சங்கத் தலைவர் பொன்னுசாமி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், ஆவின் தயிர்பாக்கெட்களில் ‘தஹி’ என்ற இந்திவார்த்தை பயன்படுத்தப்படாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஆவின் அதிகாரிகள் கூறும்போது, ‘‘ஆங்கிலத்தில் இடம் பெற்றுள்ள curd என்றவார்த்தையை நீக்கிவிட்டு இந்திவார்த்தையை பயன்படுத்த அறிவித்துள்ளனர். தமிழகத்தில் ஆவின்தயிர் பாக்கெட்களில் வழக்கம்போல பயன்படுத்த ஒப்புதல் கேட்டுகடிதம் அனுப்பப்படும். ஆவின் தயிர் பாக்கெட்டில் மாற்றம் எதுவும் செய்யப்படாது’’ என்றனர்.

முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை: இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில், ‘‘எங்கள் தாய்மொழியைத் தள்ளி வைக்கச் சொல்லும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம், தாய்மொழிகாக்கும் நாங்கள் சொல்வதைக் கேளுங்கள்.

மக்களின் உணர்வுகளை மதியுங்கள். இந்திதிணிப்பை நிறுத்துங்கள். குழந்தையை கிள்ளிவிட்டு சீண்டிப்பார்க்கும் நயவஞ்சக எண்ணம் யாருக்கும் வேண்டாம். தொட்டிலை ஆட்டும் முன்னர் தொலைந்துவிடுவீர் கள்’’ என தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT