கோவை: வட மாநில தொழிலாளர்கள் தமிழகம் திரும்ப சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளதற்கு தொழில் அமைப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
ஆண்டுதோறும் ஹோலி பண்டிகை காலத்தில் கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தங்கி பணியாற்றி வரும் வட மாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இவ்வாண்டு வட மாநிலத்தினர் தாக்கப்படுவதாக பரவிய வதந்தி காரணமாக வழக்கத்தை விட கூடுதல் எண்ணிக்கையில் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர்.
அவர்கள், மீண்டும் தமிழகம் திரும்ப தொடங்கியுள்ள நிலையில், பிஹாரிலிருந்து சென்னை, கோவை, பெங்களூரு, மும்பை, புனே உள்ளிட்ட பல நகரங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு ஓபன் எண்ட் நூற்பாலைகள் சங்க (ஓஸ்மா) தலைவர் அருள்மொழி கூறும்போது, ‘‘வழக்கமாக ஆண்டுதோறும் 50 சதவீத வட மாநில தொழிலாளர்கள் ஹோலி பண்டிகையின்போது சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். இந்த ஆண்டு வதந்தி காரணமாக ஏற்பட்ட பீதியால் கூடுதலாக 15 சதவீத தொழிலாளர்கள் புறப்பட்டு சென்றனர்.
தமிழ்நாடு மற்றும் பிஹார் மாநில அரசுகள் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக தற்போது இயல்பு நிலை திரும்பியுள்ளது. தொழில் அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது வரவேற்கத்தக்கது’’ என்றார்.
கோவை குறு, சிறு வார்ப்பட தொழில் நிறுவன உரிமையாளர்கள் நலச்சங்க (காஸ்மாபேன்) தலைவர் சிவசண்முககுமார் கூறும்போது, ‘‘கோவை மாவட்டத்தில் 600-க்கும் மேற்பட்ட வார்ப்பட தொழில் நிறுவனங்கள் செயல்படுகின்றன. இவற்றில் பணியாற்றுபவர்களில் 90 சதவீதத்தினர் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள்.
இந்தாண்டு சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் அனைவரும் மீண்டும் தமிழகம் திரும்ப தொடங்கியுள்ளனர். சிறப்பு ரயில்கள் இயக்கப்படா விட்டால், தொழில்முனை வோர் சொந்த செலவில் பேருந்து வசதி ஏற்படுத்தி அழைத்து வர நேர்ந்திருக்கும். சிறப்பு ரயில்கள் குறித்த அறிவிப்புக்கு நன்றி’’ என்றார்.