மணிமேகலைக்கு எடுக்கப்பட்ட எக்ஸ்ரேவில் தொண்டையில் தெளிவாக தெரிந்த ஊக்கு சிக்கி இருந்த பகுதி. (உள்படம்) அகற்றப்பட்ட ஊக்கு. 
தமிழகம்

இளம்பெண் தொண்டையில் சிக்கிய ஊக்கு அகற்றம்: திருப்பூர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை

செய்திப்பிரிவு

திருப்பூர்: இளம்பெண்ணின் தொண்டையில் சிக்கிய ஊக்கை அகற்றி, திருப்பூர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்தனர். திருப்பூர் கரட்டங்காட்டை சேர்ந்தவர் மணிமேகலை (36). நேற்று அதிகாலை 5 மணிக்கு, வாயில் வைத்திருந்த ஊக்கை எதிர்பாராதவிதமாக மணிமேகலை விழுங்கியுள்ளார்.

இதனால், சாப்பிட முடியாமல், தொண்டையிலும் வலி ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தந்தை வைரமணியிடம் தெரிவித்துள்ளார். உடனடியாக, திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார். அங்கிருந்த காது, மூக்கு, தொண்டை மருத்துவர் சுரேஷ் ராஜ்குமார், முதலில் மணிமேகலைக்கு எக்ஸ்ரே எடுத்து வரும்படி தெரிவித்துள்ளார்.

இதில், தொண்டையில் திறந்த நிலையில் ஊக்கு சிக்கியிருப்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து, அவருக்கு மருத்துவர் நளினா மயக்க மருந்து செலுத்தினார்.

பின்னர், மருத்துவர் சுரேஷ்ராஜ்குமார் மற்றும் ரகுராம் ஆகியோர் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தொண்டையில் சிக்கிய ஊக்கை அகற்றினர். தற்போது, மணிமேகலை சிகிச்சை பெற்று வருகிறார். இளம்பெண்ணின் தொண்டையில் சிக்கிய ஊக்கை அகற்றிய மருத்துவர்களை, மருத்துவக் கல்லூரி டீன் முருகேசன் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் பலரும் பாராட்டினர்.

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏராளமான நவீன தொழில்நுட்பங்கள் உள்ளன. இதனால் பொதுமக்கள் அச்சமின்றி சிகிச்சை பெறலாம். மணிமேகலைக்கு தொண்டையில் சிக்கிய ஊக்கு, கத்தியின்றி, ரத்தமின்றி நவீன தொழில்நுட்ப முறையில் அகற்றப்பட்டுள்ளது. வீடியோ டியூப்பை உள்ளே செலுத்தி (தொழில்நுட்பம்), அதனை திரையில் பார்த்தபடி ஊக்கை கண்காணித்து மருத்துவர்கள் வெளியே எடுத்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT