அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் எதிரொலியாக, திருவண் ணாமலை ஆட்சியர் அலுவலகம் நேற்று வெறிச்சோடியது. 
தமிழகம்

தி.மலை | 3 ஆயிரம் அரசு ஊழியர்கள் போராட்டம்: அலுவலகங்கள் வெறிச்சோடின

செய்திப்பிரிவு

திருவண்ணாமலை: பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி தமிழ் நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தால் 3 ஆயிரம் ஊழியர்கள் பங்கேற்றதால் அரசு அலுவலகங்கள் வெறிச்சோடின.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், முடக்கப்பட்டுள்ள அகவிலைப் படி மற்றும் சரண்டர் ஆகியவற்றை வழங்க வேண்டும். தொகுப்பூதியம் மற்றும் சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் ஊழியர்களை நிரந்தரப்படுத்தி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலம் நடத்த வேண்டும். ஊதிய உச்சவரம்பின்றி அனைவருக்கும் ஒரு மாத ஊதியத்தை போனஸாக வழங்க வேண்டும்.

சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலாக முறைப்படுத்த வேண்டும். அரசு துறைகளில் காலியாக உள்ள நான்கரை லட்சம் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத் தில் நடைபெற்றுள்ள போராட்டம் குறித்து அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.பார்த்திபன் கூறும்போது, “அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடைபெறுகிறது.

இந்த போராட்டத்தில், திருவண்ணா மலை மாவட்டத்தில் பணியாற்றும் வருவாய்த் துறையினர், ஊரக வளர்ச்சி துறையினர், நில அளவை துறையினர், சாலை பணியாளர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், பட்டு வளர்ச்சி துறையினர், மருந்தாளுநர்கள், சுகாதார ஆய்வாளர்கள் உட்பட பல்வேறு துறைகளை சேர்ந்த 3 ஆயிரம் ஊழியர்கள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். எங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு முன்வரவில்லை என்றால், வரும் ஏப்ரல் 19-ம் தேதி 2-ம் கட்டமாக சென்னை கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும்” என்றார்.

SCROLL FOR NEXT