வேலூர்: வேலூரில் உள்ள சிறுவர்களுக் கான பாதுகாப்பு இல்லத்தில் தங்கியிருந்த 42 பேரில் 6 பேர் நேற்று முன்தினம் இரவு தப்பினர். அவர்கள், பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களையும் தாக்கிவிட்டு தப்பினர்.
மேலும், பாதுகாப்பு இல்லத்தின் ‘பி’ தொகுதியில் இருந்த 6 பேர் திட்டமிட்டு தப்பியது அதிகாரிகள் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக ‘ஏ’ தொகுதியில் இருந்த மற்ற சிறுவர்களும் நேற்று முன்தினம் இரவு ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்களை, அதிகாரிகள் சமாதானம் செய்த நிலையில் அவர்கள் கேட்டபடி பிரியாணி உணவும் வெளியில் இருந்து வாங்கி கொடுத்துள்ளனர். இதற்கிடையில், வேலூர் பாதுகாப்பு இல்ல பிரச்சினை தொடர்பாக சமூக பாதுகாப்புத் துறை துணை இயக்குநர் கஸ்தூரி நேற்று நேரில் விசாரணை நடத்தியுள்ளார். அதில், பிரச்சினைக்குரிய 14 சிறுவர்களின் பட்டியலை அதிகாரிகள் தயாரித்துள்ளனர்.
அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் யாராவது அந்த பட்டியலில் இருந்தால் அவர்களை வேலூர் பார்ஸ்டல் சிறைக்கு மாற்றவும் பரிந்துரை செய்வது குறித்து ஆலோசித்தனர்.
இந்நிலையில், இல்லத்தின் ‘ஏ’ தொகுதியில் இருந்த சிறுவர்கள் சிலர் நேற்று இரண்டாவது நாளாக ரகளையில் ஈடுபட்டனர். அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களை உடைத்து விளையாடிக் கொண்டிருந்தனர். ஒரு கட்டத்தில் அவர்களை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. அதில் சிலர் தப்பிக்கவும் முயன்றனர். அங்கு காவல் துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
நேற்று அவர்கள் ‘ப்ரைடு ரைஸ்’ வேண்டும் என கலாட்டா செய்துள்ளனர். சிறுவர் இல்ல பிரச்சினை தொடர்பாக நீதிபதி பத்மகுமாரி நேற்று மாலை தொடங்கி இரவு 8 மணி வரை விசாரணை செய்ததுடன், அவர்களை சமாதானம் செய்ய பேச்சுவார்த்தை நடத்தினார். இதனால், பாதுகாப்பு இல்லத்தில் நேற்று இரவு வரை பதற்றமான சூழல் காணப்பட்டது.