காஜாமலை விஜய், முத்துசெல்வம், ராமதாஸ், துரைராஜ், திருப்பதி 
தமிழகம்

திருச்சி | காவல் நிலையத்துக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய வழக்கு: நேரு ஆதரவாளர்கள் 5 பேருக்கு ஜாமீன்

செய்திப்பிரிவு

திருச்சி: திருச்சி செஷன்ஸ் நீதிமன்ற காவல் நிலையத்துக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய வழக்கில் அமைச்சர் நேருவின் ஆதரவாளர்கள் 5 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி மாவட்ட முதன்மை நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

கடந்த மார்ச் 15-ம் தேதி திருச்சியில் அமைச்சர் கே.என்.நேருவுக்கு எதிராக கருப்புக்கொடி காட்டிய திருச்சி சிவா எம்.பி. ஆதரவாளர்கள் 10 பேர் கைது செய்யப்பட்டு, செஷன்ஸ் நீதிமன்ற காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தனர். இதையறிந்த அமைச்சர் கே.என்.நேருவின் ஆதரவாளர்கள் சிலர் அங்கு சென்று, காவல் நிலையத்துக்குள் புகுந்து திருச்சி சிவா ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.

இதுகுறித்து போலீஸார் 10 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கவுன்சிலர்கள் காஜாமலை விஜய், முத்துச்செல்வம், ராமதாஸ், அந்தநல்லூர் ஒன்றியக் குழு தலைவர் துரைராஜ், பொன்னகர் பகுதி பிரதிநிதி திருப்பதி ஆகியோரை கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இவர்களில் திருப்பதி தவிர, மற்ற 4 பேரும் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டனர்.

இந்த வழக்கில், தங்களுக்கு ஜாமீன் வழங்கக் கோரி 5 பேரும் தாக்கல் செய்த மனுக்கள் ஜே.எம்.2 நீதிமன்றத்தில் 2 முறை தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் 5 பேரும் திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முறையீடு செய்தனர். அந்த மனு கடந்த 24-ம் தேதி விசாரணை எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது, மனுதாரர்கள் தரப்பினர் கால அவகாசம் கேட்டதால் மார்ச் 27-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

இதனடிப்படையில், மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் இந்த மனு மீதான விசாரணை நேற்று மீண்டும் நடைபெற்றது. மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர் ஓம் பிரகாஷ் ஆஜராகி வாதாடினார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட மாவட்ட முதன்மை நீதிபதி பாபு, மறு உத்தரவு வரும் வரை, மதுரையில் தங்கியிருந்து தல்லாகுளம் காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் 5 பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். இதையடுத்து 5 பேரும் நேற்று மாலை விடுவிக்கப்பட்டனர்.

SCROLL FOR NEXT