வேலூர்: வேலூர் அரசு சட்டக்கல்லூரியில் ‘உலக மயமாக்கும் காலத்தில் மனித உரிமை பாதுகாப்பு’ என்ற தலைப்பில் ஒருநாள் கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. இதற்கு, கல்லூரி முதல்வர் ஜெயகவுரி தலைமை தாங்கினார்.
இதில், சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.சந்துரு சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசும்போது, ‘‘நீதிமன்றங்கள் 365 நாட்களும் செயல்பட வேண்டும். நீதிமன்றங்களுக்கு விடுமுறை என்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
அப்போதுதான் பாதிக் கப்பட்டவர்களுக்கும், பாதிப்பு இல்லாதவர்களுக்கும் சரியான நீதியை பெற்றுத்தர முடியும். பட்டியலின மக்களுக்கு சேவை செய்வதனால் என் பின்னால் வாருங் கள் என்று காந்தி சொன்னார். அதை முழுமையாக நிறைவேற்றியவர் வைத்தியநாதர் ஐய்யர். அவர் தான் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பட்டியலின மக்களை ஆலய பிரவேசம் செய்தவர்.
மரண தண்டனை வேண்டுமா? வேண்டாமா? என கேட்டால் பொது சமுதாயத்தில் வேண்டும் என சொல்பவர்கள்தான் அதிகம். அதுகுறித்த அறிக்கை தயாரிப்பு குழுவில் நானும் இருந்தேன்.
அதில், பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் கட்சி ஏற்காது என்றனர். ஒரு உயிரை எடுத்தவனின் உயிரை எடுக்கிறோம். அதை நியாயம் என்று கூறுகிறோம். அதையும் தாண்டி என்கவுன்டர் இருக்கிறது. இது இந்தியா முழுவதும் பரவலாக பேசப்படுகிறது.
மக்களின் ஒரு பகுதியினர், ஒரு சிலரிடம் என்கவுன்டர் ஆதரவு இருக்கிறது. அது உடனடி தண்டனை என்று கூறுகிறார்கள் ஹைதராபாத்தில் பல் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறார். இதில், தொடர்புடையவர்கள் என்று கூறி 4 பேரை என்கவுன்டர் செய்த ஆய்வாளரை மக்கள் கொண்டாடினர்.
அதன் பிறகு அவரை மக்கள் மறந்துவிட்டனர். ஆனால், என்கவுன்டரை விசாரிக்க வேண்டும் என்று கூறி சமூக ஆர்வலர் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். விசாரணை குழு 192 பக்கம் அறிக்கை சமர்ப்பித்தது. அதில், கடைசி சாராம்சம் என்ன வென்றால் அந்த நான்கு பேரும் குற்றவாளிகளே இல்லை.
யாரோ நான்கு பேரை பிடித்து சுட்டிருக்கிறார்கள். இப்போது அந்த நான்கு பேரின் உயிர் திரும்ப வருமா? அந்த நான்கு பேரை சுட்ட ஆய்வாளர் இப்போது சிறையி்ல் அடைக்கப்பட்டுள்ளார். மரண தண்டனை வேண்டாம் என்பதை மக்கள் ஏற்க மாட்டார்கள் என அரசியல்வாதிகள் கூறுகிறார்கள். உரிய நபர்களுக்குத்தான் மரண தண்டனை வழங்கப்படுகிறதா? என பார்க்க வேண்டும். மரண தண்டனை பழிக்குப் பழியாக இருக்கிறது’’ என்றார்.