தமிழகம்

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்துக்கு ஆளுநர் உடனே ஒப்புதல் அளிக்க வேண்டும்: அன்புமணி

செய்திப்பிரிவு

சென்னை: “ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடுத்தடுத்து இருவர் தற்கொலை செய்துகொண்டதை அடுத்து, தற்கொலை எண்ணிக்கை 50-ஆக அதிகரித்துள்ளதால் தடைச் சட்டத்திற்கு ஆளுநர் உடனே ஒப்புதல் அளிக்க வேண்டும்” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “விழுப்புரம் வேடப்பட்டு முரளி, திருச்சி மாவட்டம் மணப்பாறை வில்சன் ஆகியோர் ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்து கடனாளி ஆனதால் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திருச்சி திருவெறும்பூரில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த ரவிச்சந்திரன் என்பவர் தற்கொலை செய்துகொண்ட சோகம் மறையும் முன்பே அடுத்தடுத்து இரு தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன. ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்காமல், அதனால் நிகழும் அப்பாவிகளின் தற்கொலைகளையும் தடுக்க முடியாது.

ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையானவர்களால் அதிலிருந்து மீளவே முடியாது. ஆன்லைன் சூதாட்டம் திறமையின் அடிப்படையிலானது; அது அடிப்படை உரிமை என்பது போன்ற கருத்துகள் மனிதகுலத்திற்கு எதிரானவை. ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களின் முகவர்களால் பரப்பப்படுபவை!

ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் செல்லாது என அறிவிக்கப்பட்ட பிறகு நிகழ்ந்த 49 மற்றும் 50-ஆவது தற்கொலைகள் இவை. திருப்பி அனுப்பப்பட்ட சட்டம் இயற்றப்பட்ட பிறகு நிகழ்ந்த 20, 21-ஆவது தற்கொலைகள். புதிய சட்டம் இயற்றப்பட்ட பிறகு நிகழ்ந்த இரண்டாவது, மூன்றாவது தற்கொலைகள்.

ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டம் மீண்டும் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், அதற்கு ஒப்புதல் அளிப்பதைத் தவிர ஆளுனருக்கு வேறு வாய்ப்பில்லை. அரசியல் சட்டப்படியான அந்தக் கடமையை ஆளுனர் உடனடியாக செய்ய வேண்டும்''என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT