தமிழகம்

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 | ஒரே பயிற்சி மையத்தில் படித்தவர்கள் அதிகம் தேர்ச்சி: விசாரணை நடத்தப்படும் என அதிகாரிகள் விளக்கம்

செய்திப்பிரிவு

சென்னை: நில அளவர் மற்றும் குரூப்-4 தேர்வில் ஒரே பயிற்சி மையத்தில் படித்தவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளது சர்ச்சையாகியுள்ளது. தமிழக அரசுத் துறைகளில் உள்ள காலி பணியிடங்கள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும்போட்டித் தேர்வு மூலம் நிரப்பப் பட்டு வருகின்றன.

அந்தவகையில், நில அளவர்,வரைவாளர் உள்ளிட்ட பணிகளில் 1,089 காலியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு கடந்த நவம்பர் 6-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை 29 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். தேர்வு முடிவுகள் பிப்ரவரி 15-ம் தேதி வெளியாகின. தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதற்கிடையே, தேர்வில் வெற்றி பெற்றவர்களின் பதிவெண்கள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அதில், காரைக்குடியில் ஒரு தேர்வு மையத்தில் மட்டும் 700-க்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்றுள்ளது சந்தேகத்தை எழுப்பியுள்ளது. அவர்கள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட தனியார் பயிற்சி மையத்தில் படித்தவர்கள் எனக் கூறப்படுகிறது.

ஒரே மையத்தில் 2 ஆயிரம் பேர்: இதுதவிர, சமீபத்தில் வெளியான குரூப்-4 முடிவுகளிலும், தென்காசியை சேர்ந்த ஒரு தனியார் பயிற்சி மையத்தில் படித்த 2 ஆயிரம் பேர் வரை தேர்வில் வெற்றி பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விவ காரம் சமூக வலைதளங்களில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

ஏற்கெனவே 2019-ல் நடைபெற்ற குரூப்-4 தேர்வில், கீழக்கரை, ராமநாதபுரம் தேர்வு மையங்களில் நடைபெற்ற தேர்வு முறைகேடுகள் வெளியாகி, சர்ச்சையாகின. இதையடுத்து, தேர்வெழுத ஆதார் கட்டாயம், தேர்வு மையங்களைத் தேர்ந்தெடுக்க கட்டுப்பாடுகள் என பல்வேறு மாற்றங்களை டிஎன்பிஎஸ்சி கொண்டுவந்தது.

இந்நிலையில், மீண்டும் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் தொடர்பாகசர்ச்சைகள் எழுந்துள்ளன. இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டுமென கோரிக்கைகள் எழுந்துள்ளன.

இது தொடர்பாக பாமக நிறுவனர்ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், ‘‘நில அளவர் தேர்வில் ஒரே மையத்தில் தேர்வெழுதிய 700 பேர் தேர்ச்சி பெற்றுள்ளது, சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அவர்களில் பலர் காரைக்குடியில் உள்ள தனியார் மையத்தில் பயிற்சி பெற்றவர்கள்.

மொத்த பணியிடங்களில் 70 சதவீத இடங்களுக்கு ஒரே மையத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி பெறுவது இயற்கைக்கு எதிரானது. எனவே, இதுகுறித்து விசாரணை நடத்த டிஎன்பிஎஸ்சி முன்வர வேண்டும்’’ என்று வலியுறுத்தியுள்ளார்.

SCROLL FOR NEXT