கும்பக்கரை அருவியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் கரைக்கு திரும்ப முடியாமல் மறுகரையில் சிக்கிய சுற்றுலாப் பயணிகள். 
தமிழகம்

கும்பக்கரை அருவியில் காட்டாற்று வெள்ளம்: மறுகரையில் சிக்கிய சுற்றுலா பயணிகள் மீட்பு

செய்திப்பிரிவு

பெரியகுளம்: பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் நேற்று திடீரென காட்டாற்று வெள்ளம் பாய்ந்தது. மறுகரையில் சிக்கிக் கொண்ட சுற்றுலாப் பயணிகள் 30 பேரை வனத் துறையினர் பாதுகாப்பாக மீட்டனர்.

தேனி மாவட்டம் பெரியகுளத்திலிருந்து 8 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது கும்பக்கரை அருவி. கொடைக்கானல் வனஉயிரின சரணாலயத்தில் அமைந்துள்ள இப்பகுதி, தேவதானப்பட்டி வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. வட்டக்கானல், கொடைக்கானல் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்யும் மழை நீர் இங்கு அருவியாகக் கொட்டுகிறது.

கோடைக் காலம் தொடங்கியதை அடுத்து, கடந்த சில நாட்களாக அருவியில் நீர்வரத்துக் குறைவாக இருந்தது. இதனால் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைந்தது.

இந்நிலையில் நேற்று மாலை 4 மணியளவில் கொடைக்கானலின் பல பகுதிகளில் கனமழை பெய்தது. இதைத்தொடர்ந்து கும்பக்கரை அருவியில் காட்டாற்று வெள்ளம் ஏற்படத் தொடங்கியது. கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த வன அலுவலர்கள், சுற்றுலாப் பயணிகளை கரைப் பகுதிக்கு வருமாறு அறிவுறுத்தினர்.

எனினும், நீர்வரத்து வேகமாக அதிகரித்ததால் 30 பேரால் கரைக்கு வர முடியவில்லை. இதையடுத்து அவர்கள் பாதுகாப்பாக மறுகரையில் ஏறி வனப்பகுதியில் நின்று கொண்டனர்.

பின்னர் வன அலுவலர்களின் வழிகாட்டுதலின்படி வனப்பகுதி வழியே சிறிது தூரம் நடந்து சென்று சிறுபாலம் வழியாக மறுகரையிலிருந்து இக்கரைக்கு வந்து சேர்ந்தனர். நீர்வரத்து அதிகரித்துள்ளதால் கும்பக்கரை அருவியில் குளிக்க வனத்துறை அதிகாரிகள் தற்காலிகமாக தடை விதித்து உத்தரவிட்டுஉள்ளனர்.

SCROLL FOR NEXT