உளுந்து வயலை வேளாண் இணை இயக்குநர் கணேசன் தலைமையில் ஆய்வு செய்யும் அதிகாரிகள். 
தமிழகம்

விழுப்புரம் | நெல் அறுவடைக்குப்பின் சாகுபடி செய்ய 50% மானிய விலையில் உளுந்து விதை விநியோகம்

செய்திப்பிரிவு

விழுப்புரம்:விழுப்புரம் மாவட்டத்தில் 71,250 ஹெக்டேர் பரப்பளவில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. தற்சமயம் விவசாயிகள் நவரை பருவத்தில் நெல் நாற்று விடுவதை தவிர்த்து மூன்றாம் போகத்தில் உளுந்து சாகுபடி செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தழைச்சத்தை நிலைப்படுத்தி, அங்கக கரிம சேர்ப்பு மூலம் மண் ணின் அமைப்பை மேம்படுத்தி கரையா தன்மையுடைய சத்துகளை திரட்டுவதுடன், மண் அரிப்பை கட்டுப்படுத்துவதே பயறுவகை பயிர்களின் தனித்தன்மை ஆகும்.இம்மாவட்டத்தில் ஜனவரி, பிப்ரவரிமாதங்களில் நெல் அறுவடைக்குப் பின் உளுந்து சாகுபடி செய்ய 30,750 ஏக்கர் பரப்பளவில் 246 மெட்ரிக் டன் உளுந்து விதைகள் தேவைப் படுகிறது. இதற்கு முதற்கட்டமாக ரூ.73 லட்சம் மானியம் விழுப்புரம் மாவட்டத்திற்கு ஒதுக்கீடு பெறப் பட்டுள்ளது.

தற்சமயம் உளுந்து விதைகளான வம்பன் 8 ரகம் அனைத்துவேளாண் விரிவாக்க மையங்களி லும் இருப்பு வைக்கப்பட்டு 50% மானிய விலையில் அதிகப்பட்சமாக ஏக்கருக்கு 8 கிலோவிற்கு ரூ.400 மானியம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், விவசாயிகள் தொடர்ந்து நெல் சாகுபடி செய்வதால் நெல்மகசூல் குறைவதுடன் பூச்சி மற்றும்நோய் தாக்குதல் அதிகரித்துள்ளது.

இதனை கருத்தில் கொண்டு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளவிவசாயிகள் சம்பா அறுவடைக் குப்பின் குறைந்த அளவில் நீரைபயன்படுத்தி ஏக்கருக்கு 8 கிலோ உளுந்து விதைப்பு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் விதைப்பு செய்த 25 மற்றும் 35-ம் நாட்களில் இலை வழியாக 2 சதவீதம் டை அம்மோனியம் பாஸ்பேட் கரைசல் தெளிப்பதன் மூலம் அதிக மகசூல் பெற ஏதுவாகும். நெல் அறுவடைக்குப்பின் உளுந்து சாகுபடி செய்வதன் மூலம் நிலத்தில் 16 கிலோ தழைச்சத்து இடும் செலவினத்தை குறைத்து, அதிக மகசூல் பெற ஏதுவாகிறது.

மத்திய அரசு அறிவித்துள்ள குறைந்தப்பட்ச ஆதார விலையான உளுந்து கிலோவுக்கு ரூ.66, பாசிப்பயறு கிலோவுக்கு ரூ.77.50 விலையில் கொள்முதல் செய்ய அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும், நெல் அறுவடைக்குப்பின் உளுந்து சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகள் தங்கள் பெயரை உழவன் செயலியில் பதிவு செய்து பயன்பெறலாம் என வேளாண் இணைஇயக்குநர் கணேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கேட்டுக் கொண்டுள்ளார்.

கடந்த ஆண்டை விட கூடுதல்: கடந்த ஆண்டு பிப்ரவரி மாத கணக்கீட்டின்படி உளுந்து 28,450.225 ஹெக்டேர் அளவில் இருந்தது. இந்தாண்டு 32,258.310 ஹெக்டேர் என உயர்ந்துள்ளது. மழை கூடுதலாக பெய்யும்போது நெல்லும், குறைவாக பெய்யும்போது சிறுதானிய பயிர்கள் சாகுபடி செய்வதும் விவசாயிகளின் வழக்கமாகும். முதற்கட்டமாக ரூ.73 லட்சம் மானியம் விழுப்புரம் மாவட்டத்திற்கு பெறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT