செங்குறிச்சியில் பழுதடைந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையம். 
தமிழகம்

கள்ளக்குறிச்சி | சுத்திகரிக்கப்படாத குடிநீரால் சிறுநீரகம் பாதிப்பு: திறந்தவெளி கிணறு அமைக்க எம்எல்ஏ கோரிக்கை

செய்திப்பிரிவு

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை வட்டம் செங்குறிச்சி ஊராட்சி நைனாக்குப்பம் கிராமத்தில் ஆழ்குழாய் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. இந்த நீரை பருகிய கிராம மக்களுக்கு சிறுநீரகப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 14 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர். இதையடுத்து கடந்த 2017-ம் ஆண்டு குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. இந்த குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் இரு ஆண்டுகளுக்கு முன்பு பழுதடைந்ததால் மீண்டும் சுத்திகரிக்கப்படாத குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த தண்ணீரை குடிக்க கிராம மக்கள் அச்சப்படுகின்றனர்.

இந்நிலையில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை பழுது நீக்கி, சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும் என ஊராட்சி மன்றத் தலைவரிடம் கிராம மக்கள் முறையிட்டனர். ஆனாலும் சரி செய்யப்படவில்லை. இதையடுத்து மக்கள் மணிக்கண்ணன் எம்எல்ஏவிடம் முறையிட்டனர்.

இதையடுத்து மணிக்கண்ணன் எம்எல்ஏ கள்ளக்குறிச்சி ஆட்சியருக்கு இதுதொடர்பாக மனு அளித்தார். அதில், செங்குறிச்சி ஊராட்சிஆழ்குழாய் கிணற்று நீரை பருகி 14 பேர் வரைசிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு, 4 பேர் வரை உயிரிழந்துள்ளனர். எனவே ஆழ்குழாய் குடிநீர் இணைப்பை துண்டித்து, திறந்தவெளி கிணறு அமைத்து தண்ணீர் விநியோகிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT