தமிழகம்

வெம்பக்கோட்டையில் 2-ம் கட்ட அகழாய்வு - நில அளவீடு பணி தொடக்கம்

செய்திப்பிரிவு

சாத்தூர்: வெம்பக்கோட்டையில் 2-ம் கட்ட அகழாய்வுக்காக நிலத்தை அளவிடும் பணி நடைபெறுகிறது.

வெம்பக்கோட்டை விஜய கரிசல்குளம் மேட்டுக்காட்டில் 25 ஏக்கர் பரப்பளவில் முதல் கட்ட அகழாய்வுப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இங்கு இரும்பு காலத்தில் பயன்படுத்தப்பட்ட பானை ஓடுகள் அதிக அளவில் கிடைத்துள்ளன. மேலும், நுண் கற்காலக் கருவிகள், பல வகையான பாசிமணிகள், சுடுமண்ணாலான காதணிகள், பொம்மைகள் உள்பட 1,300-க்கும் மேற்பட்ட பழங்காலப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.

அதைத் தொடர்ந்து, தற்போது 2-ம் கட்ட அகழாய்வுப் பணிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் ஒப்புதல் அளித்துள்ளன. இதற்காக அப்பகுதியில் 3 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு, சுத்தம் செய்யும் பணிகள் கடந்த மாதம் நடைபெற்றது.

இந்நிலையில், அந்த இடத்தில் அகழாய்வுக்கான குழிகளை தோண்டுவதற்காக நிலம் அளவிடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் முடிந்த பிறகு 2-ம் கட்ட அகழாய்வு தொடங்கும் என்று தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT