எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு இனியும் தொடரக் கூடாது. இந்த அரசு கவிழ வேண்டும் என்பதே எங்களது நோக்கம். அதன் பின்னர் வரும் தேர்தலை எதிர்நோக்கி இருக்கிறோம். தேர்தல் வந்தால் அதிமுக அம்மா அணி நிச்சயம் ஆட்சி அமைக்கும் என அந்த அணியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
கர்நாடகா மாநிலம் குடகில் தனியார் விடுதியில் தங்கியுள்ள ஆதரவு எம்.எல்.ஏக்களை செய்தியாளர்களை டிடிவி தினகரன் சந்தித்தார். அப்போது அவர், "எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு இனியும் தொடரக் கூடாது. இந்த அரசு கவிழ வேண்டும் என்பதே எங்களது நோக்கம். அதன் பின்னர் வரும் தேர்தலை எதிர்நோக்கி இருக்கிறோம். தேர்தல் வந்தால் அதிமுக அம்மா அணி நிச்சயம் ஆட்சி அமைக்கும்" என்றார்.
அண்மையில் நடந்த பொதுக்குழு குறித்து, "முதல்வர் அணி நடத்தியது அதிமுக பொதுக்குழு அல்ல. பொதுக்குழு என்ற பெயரில் நடத்திய கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானங்கள் செல்லாது. பொதுக்குழுவை பொதுச்செயலாளர் தான் அறிவித்திருக்க வேண்டும். சசிகலா நியமனத்தை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டது. சசிகலா பெயரில்தான் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. எனவே, அதிமுக அம்மா அணி சார்பில் பொதுக்குழுவை கூட்டுவோம்" எனக் கூறினார்.
ஜெயலலிதா உடல்நிலை குறித்து திண்டுக்கல் சீனிவாசன் பேசியது குறித்த கேள்விக்கு, "ஜெயலலிதா பற்றி அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசுவது பதவிக்காகவே. சசிகலா பொதுச்செயலாளராக வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தவர் திண்டுக்கல் சீனிவாசன். சசிகலாவின் காலில் விழுந்து வணங்கினார். இன்று, சசிகலா மீது குற்றச்சாட்டை முன்வைக்கிறார். மாறி மாறி பேசும் அவரை நாங்கள் கிண்டல் செய்யத்தேவையில்லை. சமூக வலைதளங்களில் மக்களே கிண்டல் செய்வர். பயத்தால் அமைச்சர்கள் மாறி மாறி பேசுகிறார்கள். நோய்தொற்று ஏற்படும் என்பதால் 2016 அக். 1-ம் தேதிக்கு பிறகு ஜெயலலிதாவை பார்க்க சசிகலாவை கூட மருத்துவர்கள் அனுமதிக்கவில்லை" எனத் தெரிவித்தார்.