தமிழகம்

காடுவெட்டி குரு வாழ்க்கை வரலாறு ‘மாவீரா’ படத்துக்கு தடை கோரி வழக்கு: இயக்குநர் கவுதமன் பதிலளிக்க உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை: பாமக மூத்த நிர்வாகியாக இருந்த காடுவெட்டி குருவின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ‘மாவீரா’ படத்துக்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கில், இயக்குநர் கவுதமன் மற்றும் தணிக்கை வாரியம் பதிலளிக்க சென்னை பெருநகர உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வன்னியர் சங்கத் தலைவராகவும், பாமக மூத்த நிர்வாகியாகவும் பதவி வகித்த மறைந்த காடுவெட்டி குருவின் வாழ்க்கையை மையப்படுத்தி, ‘மாவீரா’ என்ற திரைப்படத்தை இயக்குநர் கவுதமன் எடுத்துள்ளார்.

தனது தந்தையின் வாழ்க்கையை சித்தரித்து படம் எடுக்க தங்களிடம் எந்த அனுமதியும் பெறவில்லை என்பதால் இந்த படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என கோரி, காடுவெட்டி குருவின் மகன் கனலரசன், சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். ‘எனது தந்தையின் வாழ்க்கையை முழுவதுமாக கேட்டு தெரிந்துகொண்ட இயக்குநர் கவுதமன், படம் எடுக்கும் போது அனுமதி பெறுவேன் என்றார்.

ஆனால், படத்தை எடுத்துவிட்டு இந்த ஆண்டு வெளியிடவுள்ளதாக பேட்டி அளித்துள்ளார். அந்த படத்தின் மூலமாக எனது தந்தையின் பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்பட்டுவிடும் என்ற அச்சம் உள்ளதால், படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்’ என கனலரசன் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை பெருநகர 7-வது உரிமையியல் நீதிமன்ற நீதிபதி, இது தொடர்பாக இயக்குநர் வ.கவுதமன் மற்றும் தணிக்கை வாரியம் ஆகியோர் மார்ச் 30-ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளார்.

SCROLL FOR NEXT