சட்டப்பேரவையில் பேரவையில் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு 
தமிழகம்

என்எல்சி விவகாரத்துக்கு தீர்வு காண உயர்மட்ட குழு: பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

செய்திப்பிரிவு

சென்னை: என்எல்சி விவகாரத்துக்கு தீர்வு காண உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

என்எல்சி நிறுவனத்திற்காக நிலம் கையகப்படுத்தப்படுதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. இது குறித்து சட்டப்பேரவையில் திமுக, அதிமுக, காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள் கவன ஈர்ப்பு தீர்மானத்தைக் கொண்டு வந்தனர். இதற்கு தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்து பேசினார்.

அதில், "என்எல்சி நிறுவனத்தில் தற்போது 1711 காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன. இவற்றில் நிலம் அளித்தவர்களுக்கு கூடுதலாக 20 மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று என்எல்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஒரு ஏக்கருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். இது தொடர்பான பேச்சுவார்த்தை இறுதிகட்டத்தில் உள்ளது. இதை உறுதிசெய்ய உயர்மட்ட குழுவை முதல்வர் அமைத்துள்ளார். விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லாத வகையில் நடவடிக்கை எடுக்க முதல்வர் அறிவுறுத்தி உள்ளார்.

ரூ.100 கோடி சிஎஸ்ஆர் நிதியை கடலூர் மாவட்டத்தில் செலவு செய்ய என்எல்சி நிறுவனம் ஒப்புதல் தெரிவித்துள்ளது. 60,000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படவில்லை. தேவைக்கு அதிகமான நிலங்களை கையகப்படுத்தும் பணியை அரசு ஒருபோதும் மேற்கொள்ளாது" என்று அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்தார்.

SCROLL FOR NEXT