தமிழகம்

பட்டாசு ஆலை விபத்துகளை தடுக்க நடவடிக்கை: பேரவையில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் உறுதி

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் பட்டாசு தொழிற்சாலை விபத்துகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சாத்தூர் ராமச்சந்திரன் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

காஞ்சிபுரம் அருகில் குருவிமலையில் நடந்த பட்டாசு ஆலைவிபத்து தொடர்பாக சட்டப்பேரவையில் நேற்று, கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

இதன் மீது, மரகதம் குமரவேல்(அதிமுக), கு.செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்), ஜி.கே.மணி(பாமக), எஸ்.எஸ்.பாலாஜி (விசிக), நாகை மாலி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), மாரிமுத்து (இந்திய கம்யூனிஸ்ட்) ஆகியோர் பேசினர். அனைவரும், வருங்காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காத வகையில், நடவடிக்கை எடுக்கும்படி அரசைவலியுறுத்தினர். உயிரிழந்தவர்களுக்கு கூடுதல் நிவாரணம், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என அதிமுக சார்பில் வலியுறுத்தப்பட்டது.

இதற்கு பதில் அளித்து அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேசியதாவது: காஞ்சிபுரம் மாவட்டம் ஓரிக்கைஅருகில் இந்த பட்டாசு ஆலை கடந்த 1991-ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. இந்த ஆலைக்கு அளித்துள்ள உரிமத்தின்படி ஒரு நாளைக்கு 15 கிலோ வெடிமருந்து இருப்பு வைக்க வேண்டும்.

ஆனால், தற்போது திருவிழாக்கள் அதிகம் இருப்பதால், அதிக பட்டாசுகள் தயாரிக்க ஆலை அதிபர்கள்முடிவெடுத்து, கூடுதல் ஆட்களைவேலைக்கு அமர்த்தி, அதிக வெடிமருந்தை பயன்படுத்தியுள்ளனர். இதனால், வெடிவிபத்து ஏற்பட்டுள் ளது.

சம்பவம் நடைபெற்றதும் அனைவரும் சென்று நிவாரண நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். சிறிய பட்டாசு ஆலையில் அதிகளவில் வெடிமருந்து வைத்திருந்ததே விபத்துக்குக் காரணம்.

விருதுநகர்மாவட்டத்தில் 1,076 பட்டாசு ஆலைகள் இருந்தாலும், பெரும்பாலான விபத்துகள் சிறு ஆலைகளில்தான் நடைபெறுகின்றன. இதற்குக் காரணம் லாபநோக்கில் ஆலை அதிபர்கள், அதிக வெடிமருந்தைப் பயன்படுத்துவதுதான்.

எனவேதான், அந்தந்த மாவட்டங்களில் உள்ள பட்டாசு ஆலைஉரிமையாளர்களை அழைத்து, அவர்களுக்கு பாதுகாப்பான முறையில் பட்டாசு தயாரிப்பதற்கான கருத்தரங்கை நடத்தி, பயிற்சிகளும் வழங்கப்பட்டன.

வெடிமருந்து பயன்படுத்தும் போர்மேன்களுக்கு தீப்பற்றாத உடை வழங்குதல், காப்பீடு உள்ளிட்ட வசதிகளை செய்து தந்துள்ளோம். எனவே, இனிவரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

தற்போது, வருவாய் நிர்வாக ஆணையர் வாயிலாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு, மாவட்டங்களில் உள்ள சிறு பட்டாசு ஆலைகளின் அதிபர்களை அழைத்துகூட்டம் நடத்தி, பணியாளர்களுக்குப் பயிற்சி, பாதுகாப்பான உடைஉள்ளிட்டவை குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச் சர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT