பி.துரிஞ்சிப்பட்டியில் சாலையில தேங்கி நிற்கும் கழிவு நீரை மிதித்தபடி செல்லும் பள்ளி மாணவர்கள். 
தமிழகம்

அரூர் | சாலையில் குளம்போல் தேங்கி நிற்கும் கழிவு நீரால் சுகாதார சீர்கேடு: பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் அவதி

செய்திப்பிரிவு

அரூர்: பொம்மிடி அருகே உள்ள பி.துரிஞ்சிப்பட்டியில் சாலையில் குளம் போல் கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதால் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

தருமபுரி மாவட்டம் பொம்மிடி அருகே தருமபுரி- சேலம் நெடுஞ்சாலையில் உள்ளது பி.துரிஞ்சிப்பட்டி. இக்கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயில் தெரு, அம்பேத்கர் தெரு, மசூதி தெரு, போயர் காலனி உள்ளிட்ட இடங்களில் 800-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.

இங்கிருந்து வெளியேறும் கழிவு நீர் தாழ்வான பகுதியில் உள்ள துரிஞ்சிப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகில் குளம்போல் தேங்கி நிற்கிறது. கழிவு நீரிலிருந்து துர்நாற்றம் வீசி வருகிறது.

அருகே அரசு தொடக்கப்பள்ளி அமைந்துள்ள நிலையில் மாணவ, மாணவிகள், வாகன ஓட்டிகள் கழிவு நீர் வழியாக கடந்து செல்லும் அவலம் உள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள், மாவட்ட ஆட்சியர், நெடுஞ்சாலை துறையினர், ஊராட்சி நிர்வாகம் உள்ளிட்ட இடங்களில் பலமுறை முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, சாலையில் கழிவு நீர் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள், மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். மழைக்காலங்களில் பாதிப்பு மேலும் அதிகமாக உள்ளது. எனவே, தரைப்பாலம் அமைத்தும், கழிவு நீர் தேங்காமல் ஓடும் வகையில் கால்வாய் அமைக்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

SCROLL FOR NEXT