சென்னை: எஸ்.ஆர்.எம்.பி.ஆர். குளோபல் ரயில் சேவையை எஸ்ஆர்எம் குழுமத் தலைவர் ரவி பச்சமுத்து நேற்று அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:
55 ஆண்டுகளாகக் கல்வி, மருத்துவம், பயணிகள் போக்குவரத்து என சேவைத் துறைகளில் இயங்கி வரும் எஸ்.ஆர்.எம் தற்போது ரயில்வே துறையிலும் கால் பதித்துள்ளது.
4 ரயில்கள் இயக்கம்: `பாரத் கவுரவ்' திட்டத்தின் கீழ் எஸ்ஆர்எம் குழுமம் 4 ரயில்களை நாடு முழுவதும் உள்ள ஆன்மிகம் மற்றும் பல்வேறு சுற்றுலாத் தலங்களுக்கு இயக்க உள்ளது.
14 பெட்டிகள் கொண்ட சுற்றுலா ரயிலில் 700 பயணிகள் வரை பல்வேறு குழுக்களாகப் பயணம் செய்ய முடியும். இந்த ரயில்களில் பயணிகளுக்குத் தேவையான அனைத்து வசதிகள், இலவச வைஃபை, சிசிடிவி கேமரா கண்காணிப்பு, பயணிகள் விரும்பக்கூடிய நட்சத்திர விடுதிகளில் தங்கி சுற்றிப் பார்க்கும் வசதி உள்ளிட்டவை பல்வேறு பேக்கேஜ்களாக வழங்கப்படவுள்ளது.
மருத்துவ சுற்றுலா திட்டத்திலும் எஸ்.ஆர்.எம் குழுமம் ஈடுபட உள்ளது. நாடு முழுவதும் உள்ள பல்வேறு சுற்றுலாத் தலங்களில் எஸ்ஆர்எம் குழுமம் சார்பில் இந்த 4 ரயில்களும் 5 ஆண்டுகள் வரை இயக்கப்படும்.
சென்னையிலிருந்து ஷீரடி, காஷ்மீர், குலுமணாலி, புதுடெல்லி, கமாக்யா, சண்டீகர், ஹைதராபாத், மைசூர், அயோத்தி, வாரணாசி எனபல்வேறு சுற்றுலா தலங்களுக்கும் எஸ்.ஆர்.எம்.பி.ஆர். குளோபல் ரயில் சேவை வழங்கப்படவுள்ளது.
இவ்வாறு ரவிபச்சமுத்து தெரிவித்தார்.